ஏன் தானதர்மம் செய்ய வேண்டும்?

பழனி முருகனுக்கு படையல் போடுவதை விட, பக்கத்துவீட்டு முருகனுக்கு சோறு போடுங்கள். இறைவன் மிகவும் விரும்புவார்.

ரகசியம் – அது எப்படி தான தர்மம் கடவுளை வசியம் செய்யும்? இது முட்டாள்தனமாக இருக்கிறதே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இதன் பின்னால் பல சூட்சமங்கள் ஒளிந்துள்ளது. பிரபஞ்ச ரகசியங்களுள் இது ஒரு மாபெரும் ரகசியம். 96 தத்துவங்களுள் இந்த தத்துவம் மிக மிக சக்தி வாய்ந்தது, வலிமை வாய்ந்தது! ஏன்? ஏனெனில் இது கடவுளையே வசியம் செய்யக்கூடியது! ஆனால் இதனால் எந்த பாதிப்பும் அல்ல. கடவுளானவர், நம்மை இப்படி யாராவது வசியம் செய்ய மாட்டார்களா என்று காத்துக்கொண்டும் ஏங்கிக்கிகொண்டும் இருக்கிறார்.

ஆழ்ந்த காரணமின்றி நம் சித்தர்களும் மகான்களும் ஜீவ காருண்யத்தை பற்றியும் தான தர்மத்தை பற்றியும் கூறவில்லை நண்பர்களே. என்ன செய்வது, கலியுக கெட்ட நேரம், “தான தர்மம்” என்ற வார்த்தையை கேட்டு கேட்டு சலிப்புதட்டி விட்டது. அதன் ஆழமான சக்தி தெரியாததால் படாரென உதறி தள்ளி விடுகிறார்கள்.

தான தர்மம் என்பது ஒரு செயல் மட்டுமல்ல, அது ஒரு லாஜிக்கான அறிவியலும் கூட. எப்படி? ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு மலைப்பகுதிக்கு நீங்கள் சுற்றுலா செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பொதுவான மனிதராக இருக்கும் பட்சம், சுற்றுலா செல்வீர்கள், சுற்றிப்பார்ப்பீர்கள், உங்களுக்கு வேண்டும் எனும் உணவை எடுத்து சென்றோ, அல்லது சமைத்தோ சாப்பிடுவீர்கள், திரும்பி விடுவீர்கள். 

சரி, மலை என்றாலே குரங்குகள் நிச்சயம் இருக்கும். ஒரு வேளை அந்த குரங்குகள் பசியில் இருந்தால் என்ன செய்வது என்ற சிந்தனையோடு போகும்போதே நீங்கள் அதற்கு வாழைப்பழங்கள் வாங்கி சென்று கொடுத்தால் அது தர்ம சிந்தனையாக மாறி, அது கடவுளை உங்கள் பக்கம் ஈர்க்கும் என்கிறேன் நான். எப்படி?

நன்றாக கவனியுங்கள். நீங்கள் வாழைப்பழம் கொடுத்தால் நிச்சயம் அந்த குரங்குகள் வாங்கிக்கொள்ளும். ஆனால் நீங்கள் வருவீர்கள், வாழைப்பழம் தருவீர்கள் என்று அந்த குரங்குகள் காத்திருக்கவில்லை. சற்று சிந்தியுங்கள், அப்போது இவ்வளவு வருடமாக இந்த குரங்குகளுக்கு படியளந்தது யார்? நீங்கள் சுற்றுலா முடித்து வீடு திரும்பிய பின்பும் அந்த குரங்குகளுக்கு படியளக்கப்போவது யார்? சந்தேகமே வேண்டாம். கடவுளைத்தவிர அது வேறு யாராக இருக்க முடியும்?

ஆம்! அவர் எப்போதும் தர்ம சிந்தனையில் கொடுக்கும் தன்மையிலேயேதான் இருந்து கொண்டிருக்கிறார். அதனால்தான் குரங்குகளுக்கு மட்டுமல்ல, உலகிற்கே படியளந்து கொண்டிருக்கிறார். இனிமேலும் அவர்தான் அந்த வேலையை தொடர்ந்து செய்யப்போகிறார்.

இதில் எப்படி கடவுளின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும்? மேலும் ஆழமாக பார்ப்போம்.

பொதுவாகவே உங்களைப்போன்றோ, உங்கள் சிந்தனையிலோ, கருத்துக்களிலோ, பேசுக்களிலோ ஒரே மாதிரியாக இருக்கும் உடன்படும் நபர்களைப்பார்த்தால் உடனே அவரிடம் நீங்கள் சென்று பேசத்துடிப்பீர்கள். அவரைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமிகுதி ஏற்படும் அல்லவா? அதே போலதான் கடவுளும்.

“பிறருக்கு உதவ வேண்டும், தான தர்மம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டாலே நீங்கள் இறைநிலைக்கு சென்று விடுகிறீர்கள்! “

ஏனென்றால் கொடுக்கும் தன்மையில் இறைவன் மட்டும்தான் எப்போதும் இருப்பார். மனிதன் எப்போதும் பெற வேண்டும் என்ற நிலையில்தான் இருபான். இப்போது நீங்களும் அவரைப்போலவே கொடுக்கும் தன்மையில் சிந்திக்க தொடங்கியவுடன், நீங்கள் அவரை தேடவே வேண்டியதில்லை. அவரே உங்களை தேடி ஓடி வந்து விடுவார்!

ஏனெனில் அவரது வேலையில் நீங்கள் பங்கு கொண்டு, நீங்களும் கொடுக்கும் தன்மைக்கு சென்றிருக்கிறீர்கள். இப்போது *கடவுள் உங்களுக்கு கடன் பட்டவர் ஆகிவிட்டார்*. கடவுளுக்கு கடன் வைப்பதே பிடிக்காது. எனவே நீங்கள் அவரைப்போலவே இருப்பதால், அவர் உங்களிடம் பெற்ற கடனை திருப்பி அடைக்க நீங்கள் செய்ததை விட பல மடங்கு உங்களுக்கு திருப்பிச்செய்வார். இதுவே சத்தியம்! இறைவாக்கு!

கவனியுங்கள், தான தர்மம் செய்வதற்கு உங்களிடம் அதிக பணம் இருக்க வேண்டிய அவசியமில்லை. வெறும் 10 ரூபாய் உங்களிடம் இருந்தாலும், அதில் 1 ரூபாய் நீங்கள் தர்மம் செய்தாலும் அதுவும் தர்மம்தான்! உடனே கடவுள் உங்களுக்கு கடன் பட்டுவிடுவார். ஒரு வேளை 10 ரூபாய் கூட இல்லாத மனிதராக இருந்தாலும் கூட நீங்கள் தர்மம் செய்யலாம். எப்படி?

கொடுக்கும் தன்மை என்பது பணத்தில் மட்டுமல்ல, அனைத்திலும் உள்ளது. எனவே நீங்கள் உங்கள் மன அளவில் ஒருவர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், அவருக்காக வேண்டிக்கொண்டாலும் (முழு மனதோடு, பொய்யின்றி நடிப்பின்றி) அதுவும் தர்மமே! உங்களுக்கு தெரிந்த விஷயத்தை நாலு பேருக்கு இலவசமாக சொல்லிக்கொடுத்தாலும் அது தர்மமே! இப்படி பல வகையில் தர்மம் செய்யலாம். பதிலுக்கு கடவுள் உங்களுக்கு பல மடங்கு நன்மை செய்வார். நம்புங்கள், இது என் வாக்கல்ல, சித்தர்களின் வாக்கு!

ஒரு வேளை தான தர்ம சிந்தனை உங்களுக்கு அதிகமாகி, அடிக்கடி இதுவே வேலையாக நீங்கள் இறங்கிவிட்டால் “கடவுள் உங்களுக்கு வசியமாகி உங்களை காதலிக்கவே ஆரம்பித்து விடுவார்!”

ஆம்! பின்பு நீங்கள் சற்றும் எதிர்பாராத, கனவில் கூட நினைத்து பார்க்காத மாபெரும் “பொக்கிஷங்களை” எல்லாம் வாரி வாரி வழங்கி அழகு பார்ப்பார். அவரது பேராற்றலால் பல அதிசயங்கள் உங்கள் கண் முன்னே நிகழும், உங்களுக்காக நிகழும்!

இதைத்தான் வேதங்களில் “கர்ம யோகம்” என்கிறார்கள். மூச்சை ஏற்றி இறக்க தேவையில்லை, இறை நம்பிக்கை தேவையில்லை, எந்த பயிற்சியும் அவசியமில்லை.

நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான்! எவ்வளுக்கு எவ்வளவு தான தர்மம் செய்கிறீர்களோ, அவ்வளக்கவ்வளவு பலன் கிடைக்கும்! இப்போது புரிந்ததா? நீங்கள் மற்றவருக்கு செய்யும் உதவி, உங்களுக்கு நீங்களே செய்துகொள்வதுதான்! உங்களால் அவர் நன்றாக இருப்பார். அவரால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். 

எனவேதான் சொல்கிறேன். தான தர்மத்தை இடைவிடாது தொடருங்கள். அது உங்களை நல்வழிப்படுத்தி மோட்சப்பாதையை நோக்கி கொண்டு சென்று தீரும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *