திருநெல்வேலியில் சைவ வேளாண்மரபில் உதித்தவர் தண்டபானிசுவாமிகள் என்னும் முருகதாசர்.
தனது சிறுவயதுமுதல் செந்தமிழ்ச்சுவை பொலிந்த திருப்புகழ்களால் முருகப்பெருமானைப்பற்றி தம்காலம் முழுவதும் துதித்து பாடிக்கொண்டே வந்துள்ளார். இலக்கணம் இலக்கியம் தெரிந்த சிறந்த புலவர்.ஆதலால் அவருக்கு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்.திருப்புகழ் சுவாமிகள் என்றும் முருகதாசர் என்றும் பெயர் சூட்டப்பெற்றார்.
வடலூர் வள்ளலாரைச் சந்தித்தல்
முருகதாசர் ஒருநாள் வடலூருக்கு வந்து வள்ளலாரிடம் சிலநாள் தங்கி முருகரது திருவருளைப்பற்றி அங்குள்ளவரிடம் சொல்லி வியந்து கொண்டே இருந்தனர். வள்ளலாரும் கேட்டுக்கொண்டே இருந்தார்.
முருகதாசர் தாம்பாடிய முருகரைப்ற்றிய திருப்புகழ் பாடல்களை எழுதி வைத்துள்ளனவற்றை வள்ளலாரிடம் எடுத்து காட்டிக்கொண்டேவரவும்.அவற்றை வள்ளலார் படிக்காமல் ஏடுகளை சிறிது தள்ளினார்.
(அருள்பெற்ற வள்ளலாருக்கு படிக்காமலே அதில் உள்ளது அனைத்தும் தெரியும் என்பது முருகதாசருக்கு தெரியாது.)
அதனால் அலட்சியங் கொண்டதாக முருகதாசர் எண்ணினார்.
அதைக் அறிந்துகொண்ட வள்ளலார் முருகதாசரை அருணகிரிநாதரே என்று சிறப்பித்து பேசினார்.
எனினும் முருகதாசருக்கு திருப்தியில்லை.
வள்ளலார் ஏடுகளை படிக்காமல் தள்ளினதால் கணக்கில்லாமற் பாடிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பதால் அனுபவஞானம் இருத்தல் வேண்டும் என்று வள்ளலார் எண்ணினரோ என்று அவர் ஐயமுற்றார். ( அதுதான் உண்மை)
வள்ளலாரை தாயுமானவர் என நினைத்தல்
முருகதாசர் அங்கு முருகர்வழியில் தியானம் செய்துகொண்டு இருந்தபோது வள்ளலார் தாயுமானவரே என்று அவருக்கு விளங்கியது.
நான் தாயுமானவர் அல்ல என்பதை புரியவைத்த வள்ளலார்.
தாயுமானவர் முதலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர். சமய மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம். இதில் நித்தியதேகம் கிடையாது. இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியமல்ல. நாளைச் சுத்த சன்மார்க்கம் வழங்கும்போது இவர்கள் யாவரும் உயிர்பெற்று மீளவும் வருவார்கள். முன்னிருந்த அளவைக் காட்டிலும் விசேஷ ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்துக் குரியவர்களாய் வருவார்கள். சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் என விளக்கம் அளித்தார்.
சாதி சமய மதங்கள் சார்ந்தவர்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும் சுத்த சன்மார்க்கிகள் ஆகமுடியாது
ஞானிகளை வினை தாக்குமோ?
ஒருநாள் முருகதாசர் உஷ்ணவாயுவால் சிறிது அபக்குவம் அடைய எதனால் வந்தது என வள்ளலார் கேட்க வினையால் வந்தது என்றார் முருகதாசர்.
வள்ளலார் இங்கேயும் வினை உண்டோ? என்று கூறி சந்நியாசிகளை வினை தாக்குமோ என்பதைக் குறித்துப் பிரசங்கம் செய்தார். உண்மையான அன்பு தயவு கருணை உயிர்இரக்கம் ஜீவகாருண்யம் செய்வோரை வினை தாக்காது என புரியவைத்தார்.
பின்பு வள்ளலாரைக் குறித்து வினாப்பதிகமும்.அனுபவப்பதிகமும் பாடி ஜீவகாருண்யம் விளக்கவந்த பூரண அனுபவஞானி என வள்ளலாரைப் புகழ்ந்து போற்றிபாடினார்.
முருகதாசர் வள்ளலார் சொல்லிய வண்ணம் ஜீவகாருண்யத்தை கடைபிடித்து வந்தார். அதனால் தண்டபானிசுவாமிகள் என்னும் முருகதாசருக்கு ஜீவகாருண்ய மூர்த்தி என்ற பெயரோடு புகழ்பெற்று விளங்கினார்.
இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில்?
ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம் யோகம் தவம் தியானம் விரதம் ஜெபம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத வெற்று மாயாஜாலச் செய்கைகளே ஆகும் என்று அறிய வேண்டும் என்று வள்ளலார் தெளிவுபட சொல்லுகின்றார்.
அருள் பெற்றவர்களால் மட்டுமே படிக்காமல் படிக்கவும் படிக்காமல் உணர்ந்து கொள்ளவும் படிக்காமல் எதையும் பற்றிக் கொள்ளவும் முடியும்
வள்ளலார் பாடல்
” முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
முடுகி அழிந் திடவும் ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றது இது தொடங்கிநிகழ்ந் திடும் நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!
என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரிவிக்கின்றார்.
இதுவரை படியாதபடிப்பான சாகாக்கல்வியைக் கற்றவர் வள்ளலார் ஒருவரே வள்ளலார் பாடல்!
கற்றேன் சிற் றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணைநெறி
உற்றேன்
எக் காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன்
உலகில் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றேஎன் பற்றெனப் பற்றினனே.! “
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.