வள்ளலார் கருங்குழியில் தங்கியிருந்த காலத்தில் தங்கள் குறைகளை விண்ணப்பம் செய்ய அன்பர்கள் கூட்டம் கூட்டமாக வள்ளலாரைச் சந்திக்க வரத்தொடங்கினர்.
அக்காலத்தில் பசி பட்டினி வறுமையில் மக்கள் தவித்துள்ளார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னமளித்து பசியைப்போக்க ஒரு பொது இடம் தருமச்சாலையாக அமைக்க திருவுளங்கொண்டார்.
அவ்வாறு கட்டப்படும் தருமச்சாலை. நான்கு புரத்திலும் உள்ள மக்கள் சிரமம் இல்லாமல் வந்து போகும் மத்திய இடமாக அமைய வேண்டும் என்று அன்பர்களிடம் கட்டளையிட்டார். பல பல அன்பர்கள் பல பல இடங்கள் குறித்து தேர்வுசெய்து வள்ளலாரிடம் கூறியுள்ளனர்.
வள்ளல்பெருமானுக்கு அவர்கள் கூறிய இடங்கள் திருப்தி தரவில்லை.
ஒருகால் வள்ளலார் தாமே சென்று வடலூர்ப் பெருவெளியில் நின்று இங்கே அமைத்தால் சிறப்பாக இருக்கும் என அவ்விடத்தை சுற்றி சுற்றி வந்தார்.
வள்ளலாரின் உண்மை நிலை அறிந்து வடலூர் மக்கள் 80 காணி நிலத்தை வள்ளலாருக்கு இலவசமாக பட்டா செய்து கொடுத்துள்ளார்கள்.
அவ்விடத்தை குறிக்க காரணம்
சிதம்பரம்.
கூடலையாற்றூர்.
விருத்தாசலம்.
திருவதிகை.
திருஇரும்பைமாகாளம்.
திருப்பாதிப்புலியூர். தியாகவல்லி. முதலிய ஸ்தலங்களுக்கு மத்திய இடமாகவும்.
தென்பெண்ணையாறு. கெடிலநதி. வெள்ளாறு.
மணிமுத்தாநதி முதலிய நதிகளால் சூழப்பட்டதாயும் உள்ள வடலூர்ப் பெருவெளி வழியாகச் செல்வோர்க்குப் பசிதீர்த்து அனுப்புதற்கு வசதியுள்ள இடமாகவும் அமைய வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமாகும்.
வள்ளலாரின் விருப்பம் போல் 23-5-1867 பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை அமைத்து சிறப்பாக தொடக்கவிழா நடைபெற்று இன்றுவரை மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது என்பது யாவரும் அறிந்த்தே.
அன்று வள்ளலார் ஏற்றிவைத்த அடுப்பு இன்றுவரை அணையாமல் மக்கள் பசிப்பிணியைப் போக்கிவருகிறது..
மேலும் வடலூரில் இருந்து பார்த்தால் சிதம்பரம் நான்கு கோபுரங்களும் தெரியும் என்பார்கள்.
மேலும் நகர வாசனைவிட்டு தனியே ஓர் இடத்தில் இருந்து ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் நிலையிலேயே திளைத்து மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே வள்ளலாரின் வடலூர் தேர்வின் முக்கிய விருப்பமும் ஆகும்.
மேலும் வடலூர் பெருவெளி உலகத்தின் மையப்பகுதி எனவும் சொல்லப்படுகிறது எனவேதான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபைத் தோற்றுவித்துள்ளார் வள்ளல்பெருமான்
உலகமக்கள் யாவரும் வந்து அருள் பெறும் தகுதிவாய்ந்த இடமே வடலூர் பெருவெளியாகும்.
எனவே தான் இயற்கையாகவே வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு தேர்வு செய்துள்ளது வள்ளலார் கொள்கையை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
வள்ளலார் பாடல்!
” உலகமெலாம் தொழ உற்றது எனக்கு உண்மை ஒண்மை தந்தே
இலக எலாம் படைத்தது ஆருயிர் காத்தருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனாநின்றது உத்தர ஞான சிதம்பரமே.! “
வடலூர் பெருவெளிக்கு உத்தரஞான சிதம்பரம் என்றும் உத்தரஞான சித்திபுரம் என்றும் வள்ளலாரால் பெயர் சூட்டப் பெற்ற புண்ணிய பூமியாகும்.
நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்பார் வள்ளலார் பாடல் !
” உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி
இலகஅருள் செய்தான் இசைந்தே –
திலகன்என
நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்
நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.! “
எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்செயலே
தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் வடலூர் பெருவெளியாகும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !