மாமிச உணவை ஏன் தவிர்க்க வேண்டும் திருவள்ளுவர் கூறுகின்றார்

திருக்குறளையும் மதிக்க மாட்டேன் என்று சொல்பவர்கள் தங்களை தமிழர் என்று பெருமை பேச வேண்டாம்..

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். 251

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும். 

பொருளாட்சி போற்றாதார்க்(கு) இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை. 

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம். 253

ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. 

அருளல்ல(து) யாதெனில் கொல்லாமை கோறல்

பொருளல்ல(து) அவ்வூன் தினல். 254

அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது. 

உண்ணாமை உள்ள(து) உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யா(து) அளறு. 255

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளிவிடாது. 

தினற்பொருட்டால் கொல்லா(து) உலகெனின் 

யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். 256

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார். 

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்ணது உணர்வார்ப் பெறின். 257

புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்து அறிவாரைப் பெற்றால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். 

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார். 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று. 259

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது. 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும். 260

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *