சத்திய ஞானசபை கட்டிடம் கட்டும்போது நடந்த அற்புதம்

வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபை கட்டும்போது மேல்விதானம் ( மேற்கூரை) கட்ட மூன்றுபேர் நின்று வேலைசெய்ய சாரம் கட்டப்பட்டது.

அந்தசாரத்தின் மீது மூவரும் ஏறி வேலை செய்யும்போது சாரமாய் நின்ற மரம் ஒன்று ஒடிந்ததால் சாரம் சாய்ந்து விழுந்தது.

அதனால் அவர்களுக்கும் கீழே இருந்தவர்களுக்கும் சிறிதுகூட காயம் ஏற்படாமல் துன்பம் நேரமால் பாதுகாப்பு நிகழ்ந்தது.

அலங்காரப்பந்தல் அமைத்தது !

சத்திய ஞானசபை கட்டி முடிந்தவுடன் தஞ்சாவூர் மராட்டியர்களைக் கொண்டு பெரியதோர் அலங்காரப்பந்தல் வெகு விமரிசையாய்ப் பெரும்பொருள் செலவிட்டுச் சில அன்பர்கள் மூலமாக அமைத்தனர்.

ஆயினும் அலங்கார பந்தல் வேலைக்கு வந்த வெளியூர்காரர்கள் மாமிசம் உண்ணும் புறவினத்தார் என்பதை அறிந்து கொண்டார் வள்ளலார்.

மேட்டுகுப்பத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருக்கும்போது மாலையில் திடீரென வெளியில் வந்து இது போதப்பந்தலாகும் இது ஆண்டவருக்கு சம்மதம் இல்லை எனவே அருட்பெருஞ்ஜோதி தரிசனம் மட்டும் பாருங்கள் என்று கூறியவுடன் சில நிமிடத்திற்குள் மழை உண்டாகி அப்பந்தல்மேல் இடி விழுந்த்து.

வள்ளலார் தோன்றியது !

அன்பர்கள் பயந்து நடுங்கினர்.

ஞானசபைக்கு கெடுதி நேரிடுமே என்று வருந்தியபோது. அங்கு வள்ளலார் சபைக்குமுன் தோன்றினர் சபைக்கு ஒன்றும் நேரிடாது என்றும். தீயை அவிக்க வேண்டாம் என்றும் கூறினர்.

அவ்விதமே நெருப்பு நான்கு ஐந்து நாட்களாக எரிந்துகொண்டு இருந்தும் சத்திய ஞானசபைக்கு சிறிதும் அபாயம் செய்யவில்லை என்பதை அறிந்த மக்கள் வள்ளலாரின் அற்புதத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள்.

சாதி சமயச் சழக்கெலாம் அற்றது சன்மார்க்க ஞானசபை நிலைப்பெற்றது

அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே.

ஞானசபை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையால் கட்டப்பட்டது ஆதலால் தீமைகள் நெருங்காது அதுபோல் நாம் செய்யும் காரியங்கள் எதுவானாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைக்கொண்டு செய்தால் நன்மையே உருவாகும்.

வள்ளலார் பாடல்!

” வன்புடையார் கொலைகண்டு புலைஉண்பார் சிறிதும்

மரபினர்அன்று ஆதலினால் வகுத்தஅவர் அளவில்

அன்புடைய என்மகனே பசிதவிர்த்தல் புரிக

அன்றி அருட் செயல்ஒன்றும் செயத்துணியேல் என்றே

இன்புற என் தனக்கிசைத்த என்குருவே எனைத்தான்

ஈன்ற தனித் தந்தையே தாயே என் இறையே

துன்பறுமெய்த் தவர் சூழ்ந்து போற்ற திருப் பொதுவில்

தூய நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே.!

மேலும்..

கொடியவரே கொலைபுரிந்து புலைநுகர்வார் எனினும்

குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது”

படியில்அதைப் பார்த்துகவேல் அவர்வருத்தம் துன்பம்

பயந்தீர்ந்து விடுகஎனப் பரிந்துரைத்த குருவே

நெடியவரே நான்முகரே நித்தியரே பிறரே

நின்மலரே என்கின்றோர் எல்லாரும் காண

அடியும்உயர் முடியும்எனக் களித்தபெரும் பொருளே

அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.!

மேலும்…

உயிர்க் கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்

பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே

நயப்புறு சன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே

மயர்ப்பறு மெய்த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசே என் மாலைஅணிந் தருளே.! “

என்னும் பாடல்களால் அறியலாம்.

உயிர்க்கொலை செய்வதாலும் புலால் உண்பதாலும் கடவுளை நெருங்கவே முடியாத ஒரு பாவச்செயல் என்றாலும் அவர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் போக்க வேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொன்னவர் வள்ளலார் 

வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் உயிர்க்கொலை செய்யாதவர்கள் புலால் உண்ணாதவர்கள் என்பது உலகமே அறியும்.

அதேபோல் மற்றவர்களையும் உயிர்க்கொலை செய்யாமலும்.

புலால் உண்ணாமலும் இருக்க தெளிவான அறிவுரை வழங்கி நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு சன்மார்க்கிகளும் நன்முயற்சி செய்து மக்களுக்கு போதிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *