கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் மற்றும் வடலூர் வள்ளலார் சந்திப்பின் சாராம்சம்

தில்லை சிதம்பரத்தில் கிழக்குச் சந்நிதித் தெருவில் உள்ள சத்திரத்தில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தங்கள் சீடர்களுடன் வந்து தங்கி இருந்தார்.அவர் சிறந்த தத்துவ கலைகள் அறிந்த சிவபக்தர். பல திருக்கோயில்கள் திருப்பனிகள் செய்தவர். பல சித்துக்கள் கைவரப்பெற்றவர்.

அதேநாளில் சிதம்பரம் வடக்குச் சந்நிதித் தெருவில் உள்ள மடத்தில் வள்ளல்பெருமான் மற்றும் பல அன்பர்களுடன் வந்து தங்கி இருந்தார். 

சுந்தரசுவாமிகள் தங்கிஇருப்பதை அறிந்த வள்ளலார் சந்திப்பதற்கு நேரம் கேட்டுவர சிலரை அனுப்பி வைத்தார்.

அன்பர்கள் அங்கு சென்றவுடன் விபரத்தை அறிந்த சுந்தரசுவாமிகள் இங்கா சமயம் பார்த்துவர சொன்னது என்று கூறி உடனே புறப்பட்டு அன்பர்கள் கூட்டத்துடன் சிவமந்திரம் சொல்லிக் கொண்டே வள்ளலார் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

உடனே வள்ளலாரும் சுந்தரசுவாமிகளும் பெருமகிழ்ச்சியுடன் ஒருவரைஒருவர் கைகூப்பி வணங்கி இருவரும் அமர ஆயுத்தமானார்கள் 

மூன்றுநாள் உரையாடல்

வள்ளலார் சுந்தரசுவாமிகளைதன் எதிரே அமரும்படி பலமுறை சொல்லியும் சுவாமிகள் வள்ளலார் திருமுன் நேரே பார்த்து உட்காராமல் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார்.  

ஞான விஷயமாக அன்பர்களுக்கு புரியும் வண்ணம் மூன்று நாட்கள் இருவரும் உரையாடினார்கள்.

ஞானத்தின் வல்லமையும் அருள் சார்ந்த ரகசியங்கள் பற்றியும். இறை உண்மையும் மற்றும்

பிரபஞ்ச ரகசியங்களையும் சுவாமிகளுக்கு தெரியாத விபரங்கள் யாவும் வள்ளலார் சொல்வதை கேட்டு சுவாமிகள் தோல்வி அடைந்தவர் போல் மனம் சோர்வடைந்து காணப்பட்டார். 

சுவாமிகள் சோர்வு அடைந்த முகத்தை கண்ட வள்ளலார் சுவாமிகளை உரையாடச்சொல்லி தான் தோல்வி அடைந்தது போல் காட்டி அவர் மனதை மகிழ்ச்சி அடையச்செய்வித்தார்.

அப்போது அங்கிருந்த வேலூர் நாகப்பன் என்பவர் மகாதேவமாலையில் உள்ள பாடல்களை பாடினார். 

சுந்தரசுவாமிகள் இது யார் பாட்டு என கேட்க.வள்ளலார் பாடியது என்று அவர் சொன்னார். உடனே சுவாமிகள் இப்படி எல்லாம் பாடி என்னை அலைகழிக்க வைத்துள்ளீர்கள் என்று பெருமிதம் கொண்டு இன்னும் என்னை சோதிக்க வேண்டாம் என்றார்..

சுவாமிகளை நோக்கி வள்ளலார் இங்கு எவ்வளவு நேரம் உரையாடினோமோ அவ்வளவும் அனுபவித்தில் வந்தால் விசேடம் என்றார்.

சுவாமிகள் வள்ளலாரிடம் நீங்கள் பெரிய ஞானம் உள்ளவர் எனத்தெரியும்.

இவ்வளவு பெரிய ஞானசித்தர் என்பதை இன்று நேரில் கண்டேன்.

உங்களை சந்தித்தது நான் செய்தபுண்ணியம் எனக்கு கிடைத்த பெரியபாக்கியம் எனக் கூறினார்.

விபூதி பிரசாதம் கேட்ட சுந்தரசுவாமிகள்!

வள்ளலாரிடம் சுந்தரசுவாமிகள் உங்கள் கரங்களால் விபூதி வழங்கவேண்டும் எனக்கேட்டார். முத்தி பெறும் தகுதி உடையவர் என்பதால் சுவாமி அவர்களுக்கு விபூதி தர மறுத்துவிட்டார்.

ஆயினும் சுந்தரசுவாமிகள் தன்னிடம் இருந்த வாழைமட்டையில் உள்ள விபூதியை எடுத்து வள்ளலார் நெற்றில் இட்டு்.அவற்றை மீண்டும் எடுத்து தன்னிடம் உள்ள விபூதியில் கலந்து தானும் இட்டுக்கொண்டு அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்தார்.

பின்பு இருதரப்பினரும் அன்புகலந்த புன்னகையுடன் வந்தனம் கூறி பிரியா விடைபெற்றார்கள்.

பின்பு நடந்த விபரம்

சுந்தரசுவாமிகளை வழிஅனுப்ப கீழவீதிச் சந்நிதிக்கு சென்ற அன்பர்கள். சுவாமிகளிடம் நீங்கள் வள்ளலார் முன்பு நேரே உட்காராமல் தள்ளி உட்கார்ந்த காரணம் என்ன என கேட்டார்கள்.

அதற்கு சுவாமிகள். வள்ளலார் முன்பு உட்காருவோர் சக்தியை அப்போதே இழுத்துக்கொள்ளும் ஆற்றல்மிக்க ஞானசித்தர் என்று விடை அளித்துவிட்டு சென்றுவிட்டார்  

கண்ணீர் விட்ட வள்ளலார்!

சுந்தரசுவாமிகள் சென்றதும் தம் அன்பர்களிடம். கருணையே வடிவமான வள்ளலார். நல்ல ஒழுக்கமுள்ளவர் உண்மையானவர். பற்று அற்றவர் சுந்தரசுவாமிகள்.முத்திபெறும் வாய்ப்பு இருந்தும் மேற்கொண்டு சித்தி பெறமுடியாமல்

(மரணத்தை வெல்ல முடியாமல்) இன்னும் சில ஆண்டுகளில் மரணம் அடைந்துவிடுவார் என்று சொல்லி கண்களில் நீர்விட்டு அழுதுள்ளார். 

வள்ளலார் சொல்லியவாறே 1878 ஆம் ஆண்டு அக்டோபர் 21 தேதி ஜீவசமாதி ஆனார்.

அவர் சமாதி புதுக்கோட்டையில் இருந்து 22 கி.மீ தொலைவில் உள்ள அரிமளம் என்ற இடத்தில் உள்ளன. 

வடலூருக்கு அடுத்த 5 கி.மீ தொலைவில் உள்ள மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகையில் 30-1-1874 ஆம் நாள் இரவு 12 மணிக்கு வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தார் (சுத்த பிரணவ ஞான சித்தி பெற்றார்) மரணம் அடையாமல் ஒளிதேகம் பெற்று வாழ்ந்து கொண்டுள்ளார்.

” முத்தி என்பது சாதனம் ! சித்தி என்பது சாத்தியம்!

முத்தியென்பது நிலை முன்னுறு சாதனம்

அத்தக வென்ற என்அருட்பெருஞ் ஜோதி!

சித்தியென்பது நிலைசேர்ந்த அநுபவம்

அத்திறல் என்ற என்அருட்பெருஞ் ஜோதி! “

என்னும் அகவல் வரிகளின் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.

நாமும் வள்ளலார் வழியில் வாழ்ந்து முத்தேக சித்திபெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *