வள்ளலாரின் திருஉருவம் போட்டோவிற்கு அடங்காத அதிசயம் நிகழ்ந்தது எப்படி? ஏன்?

போட்டோவிற்குள் அடங்காத வள்ளலார்!

வள்ளலார் புகழ் தமிழ்நாடு எங்கும் புகழ்பெற்று விளங்குகின்ற காலம்.

வள்ளலார் திருஉருவத்தைப் புகைப்படம் எடுக்க விருப்பம் கொண்ட சென்னை அன்பர் புகழ்பெற்ற புகைப்படக்காரர் மாசிலாமணிமுதலியார் அவர்கள் புகைப்பபடம் எடுத்தார் வள்ளலார் திருஉருவம் விழவில்லை.

மீண்டும் எட்டுமுறை தொடர்ந்து புகைப்படம் எடுத்தார்.

வள்ளலார் திருமுகமும் திருக்கரங்களும் திருவடிகளும் புகைப்படத்தில் விழாமல் வெள்ளைவேட்டி மாத்திரம் விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியுடன் அற்புதத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து போனார்.

வள்ளலாரின் அருள் உடம்பு (ஓளிஉடம்பு) ஆதலால் புகைப்படத்தில் விழவில்லை. என்பதை உணர்ந்த வள்ளலாரின் மாணாக்கர்கள் வேலாயுதனார் இரத்தினம். போன்ற அன்பர்களும் மேலும் மக்களும் வள்ளலாரைப் போற்றி புகழந்து கடவுளாகவே துதிக்க மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பொன்னான உருவத்தை மண் உருவமாக்கியது!

வள்ளலார் மீது பேரன்புகொண்ட குயவன் ஒருவன் பண்ணுருட்டியில் வாழ்ந்துவந்தான் அவன் வள்ளலாரின் திருஉருவத்தை மண்ணால் அமைத்து உரிய வர்ணங்களைத் தீட்டி பாதுகாப்பாக கொண்டுவந்து வடலூர் தருமச்சாலையில் இருந்த வள்ளலாரிடம் கொடுத்தார். வள்ளலார் அந்த மண்பொம்மையை பெற்றுக்கொண்டு தருமச்சாலைக்கு வெளியே வந்து பொன்னான மேனி மண்ணாயிற்றே என்றுகூறி இருகையையும் விட்டுவிட்டார்.

அந்த மண்பொம்பை கீழே விழுந்து தூளாகியது.

பின்பு வள்ளலார் உருவம் செய்வதை நிறுத்திவிட்டனர்.

வள்ளலார் சித்திபெற்ற பிறகு மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவன். வேறு ஒரு வள்ளலார் உருவம் அமைத்தான். அந்த உருவத்தில் இருந்து தான் பலவிதமான உருவங்கள் புகைப்படங்கள் எடுத்து வழக்கத்தில் வரத்தொடங்கியது.

என்னை வணங்க வேண்டாம் என்றவர் வள்ளலார்!

சன்மார்க்கிகள் சொன்ன பேச்சை கேட்கவே மாட்டார்கள் என்பது வள்ளலாருக்கு முன்கூட்டியே தெரியும்

வள்ளலார் சொல்லியதை செவிச் சாய்க்காமல் தங்கள் தங்கள் விருப்பம்போல் சன்மார்க்க சங்கங்களில் சமய மத வழிபாடுகள் போன்று வள்ளலார் உருவத்தை வைத்தும் விபூதிபட்டை அடித்தும் மாலைபோட்டும் படையல் வைத்தும் தீபாராதனை காட்டியும் வணங்கியும் வழிபாடுசெய்து வருகிறார்கள்.

சாதி சமயம் மதம் போன்ற ஆச்சாரங்கள் வேண்டாம் என்று சொன்ன வள்ளலாருக்கே விபூதி பட்டையை அடித்து வழிபாடு செய்துவருகிறார்கள்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வழிபடுங்கள்

உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! அவரை வணங்காமல் என்னை தெய்வமாக வணங்காதீர்கள் என்று பேருபதேசத்திலும் பாடலிலும் தெளிவாக சொல்லி உள்ளார்.

பேருபதேசத்தில் சொல்லியது

தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வம் எனச் சுற்றுகின்றார்கள்.

ஐயோ நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினால் அல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்.

என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன். இருக்கின்றேன். இருப்பேன் என தெளிவாக சொல்லி புரிய வைக்கின்றார் வள்ளலார்.

மேலும் சன்மார்க்க அன்பர்களுக்கு பாடல் வாயிலாகவும். சொல்லுகின்றார் ! 

” சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள்வணங்கிச்சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்

என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்

எல்லாம்செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக்கம் அடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! “

என்ற பாடல்வாயிலாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் வணங்குங்கள் என்று சத்தியம் வைத்து சொல்கின்றார். 

புதியவர்கள் வருகை

பழைய சன்மார்க்கிகள் அனைவரும் சாதி சமயம் மதம் சார்ந்தவர்கள்.

ஆதலால் ஒருவரும் சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என்பது தெளிவாக தெரிகின்றது

எனவே அருள்பெறும் வாய்ப்பையும் மரணத்தை வெல்லும் வாய்ப்பையும் இழந்துகொண்டே உள்ளார்கள்.

இனிமேல் வரக்கூடியவர்கள் சாதி சமயம் மதம் அற்ற வள்ளலாரின் சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து அருளைப்பெறும் தகுதியுடையவர்களாக வந்துகொண்டே உள்ளார்கள்.

அருள்பெறும் வாய்ப்பை கண்டிப்பாக பெறுவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டாம். 

இனி சுத்த சன்மார்க்க காலம். சுத்த சன்மார்க்கத்திற்கு எவ்விதப்பட்ட தடைகளும் கிடையாது. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் உலகம் முழுவதும் வள்ளலார் கொள்கைகள் நிறைந்து விளங்கும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *