சத்திய ஞானசபை / சத்திய தருமச்சாலை அமைந்த வரலாறு!

சபையெனது உளம் எனத் தானம் அமர்ந்து எனக்கே

அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! (அகவல்)

சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமுதம் உண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் ! 

என்னும் இயற்கை உண்மை அனுபவத்தை அனுபவித்து கண்ட பின்பு பாடல் வாயிலாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார். 

அகத்தில் கண்ட இயற்கை உண்மை அனுபவத்தை இயற்கை விளக்கமாக புறத்தில் சத்திய ஞானசபையை அமைக்க தொடங்குகிறார்.

வடலூரில் சத்திய ஞானசபை அமைப்பதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவளின் ஆணைப்படி அனுமதி வழங்கி வள்ளலாரால் ஞானசபை கட்டிட வரைபடம் தயாரிக்கப்பட்டது

எட்டு அம்பலம் எண்கோணம்!

உலகின் திசைகள் எட்டு. அதேபோல் எண்சான் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது பெரியோர்களால் சொல்லப்பட்ட உண்மையாகும்

மேலும் எட்டு அடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் தலைவன் என்றும் சொல்லுவார்கள் ஆதலின் எண்கோண வடிவமாக எட்டுக் கதவுகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளதே சத்திய ஞானசபையாகும். 

மனிதனின் தலைப்பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கின் மேலே மத்தியில் ஆன்மா விளங்கும் இடத்தை குறிப்பிடும் வகையில் அமைக்கப்பட்டதே சத்திய ஞானசபையாகும். ஆன்மா என்பது அறிவு அருள் விளங்கும் சிற்சபை இடம் உடம்பையும் உயிரையும் இயக்க ஆணையிடும் (கட்டளையிடும்) இடம் ஆன்மா (உள்ஒளி) இருக்கும் இடம்

உள்ளொளி யோங்கிட உயிர் ஒளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே! (அகவல்)

ஞானசபை அமைக்கப்பட்ட காலம்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி ஞானசபை கட்டிட வேலை 1871 ஆம் ஆண்டு ஆனிமாதம் ஞானசபை கட்டத் தொடங்கப்பெற்றது. 25-1-1872 பிரஜோத்பத்தி தைமாதம் 13 ஆம் நாள் வியாழக்கிழமை பூசநாளில் நிறைவு பெற்றது. 

ஞானசபைக்கு இயற்கை விளக்கம் என்பார் வள்ளலார்.

( தைப்பூசம் ஜோதி தரிசனம் வள்ளலாரால் தொடங்கப்பட்டதா ? என்பதை பிறகு சிந்திப்போம்.)

சபை கட்ட பணம் எவ்வாறு வந்தது?  

ஞானசபை கட்டுவதற்கு பணம் வெளியில் யாரிடமும் நன்கொடையாகவோ இனாமாகவோ பெறவில்லை.

யாரிடமும் பணம் வாங்கவும் மாட்டார் வள்ளலார்.

தங்கம் செய்து பணம் பெற்றது!

வள்ளலார் தங்கம் உண்டாக்கும் மூலிகைகளைக்கொண்டு வேதியல் மாற்றம் போல் தங்கம் தயார் செய்து தக்கவர்களைக் கொண்டு விற்று வரச்சொல்லி அதனால் கிடைக்கும் பணத்தைக் கொண்டே ஞானசபையைக் கட்டியுள்ளார்.

ஞானசபைக் கட்டும் தொழிலாளர்களுக்கு பணம் எண்ணித் தரமாட்டாராம்.

தன் மடியிலிருந்து கையில் எடுத்துக் கொடுப்பாராம்.

அவரவர் வேலைக்குத் தகுந்த கூலிப்பணம் அதில் சரியாக இருக்குமாம். 

அவ்வாறே பணம் தயார் செய்து ஞானசபையைக் கட்டியதாகும்.

தேவைக்கு மேல் தங்கம் தயாரிக்கவும் மாட்டார் கையில் வைத்திருக்கவும் மாட்டார்.

வள்ளலார் தங்கம் தயார் செய்வது எப்படியோ வெளியில் தெரிந்துவிட்டது.

வள்ளலார் அரசாங்கத்திற்கு தெரியாமல் தங்கம் தயார் செய்கிறார் என்பதை அறிந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் வள்ளலார் தங்கி இருக்கும் மேட்டுக்குப்பத்திற்கு வந்து விசாரணை செய்கிறார்கள்.

நீங்கள் தங்கம் தயார் செய்வதாக எங்களுக்கு புகார் வந்துள்ளது ஆதலால் உங்களை விசாரிக்க வந்துள்ளோம் என்று வள்ளலாரிடம் சொல்கிறார்கள்.

தங்கம் தயாரிக்கும் தடயங்களோ

தங்கமோ இருந்தால் தாராளமாக

எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார் அவர்கள் அறை முழுவதும்

தேடுகிறார்கள் அதற்குண்டான தடையங்களோ தங்கமோ எதுவும் கிடைக்கவில்லை. தேவைப்படும் போது மீண்டும் விசாரணைக்கு வருவோம் எனச் சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள்.

பிரம்பு தங்கமானது

உடனே வள்ளலார் ஆட்சியர் கையில் வைத்திருந்த இரண்டு பக்கமும் வெள்ளி பூண் போட்ட பிரம்பினை கொடுங்கள் என்று வாங்கித் திரும்பவும் அவரிடம் கொடுக்கின்றார்.

அதிகாரி பிரம்பை வாங்கி பார்க்கிறார். வள்ளலார் கரம் பட்டதும் அப்பிரம்பு தங்கமாக மாறிவிட்டது. மீண்டும் வள்ளலார் அப்பிரம்பை வாங்கி திருப்பித் தருகிறார் சாதாரண பூண்போட்ட பிரம்பாக மாறிவிட்டது.

அதிகாரிகள் வள்ளலார் காலில் விழுந்து வணங்கி எங்களை மன்னித்து விடுங்கள் என்றனர். 

நீங்கள் முற்றும் அறிந்தவர். பற்று அற்ற உயர்ந்த ஞானி( அருளாளர்) என்பது தெரியாமல் வந்துவிட்டோம் என்று கூறினர் பின் ஆசிப்பெற்று சென்றார்கள்.

வள்ளலார் தங்கம் செய்ததற்கு ஆதாரம்

சென்னையில் உள்ள தனது நெருங்கிய அன்பர் இரத்தினமுதலியாருக்கு வள்ளலார் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் குறிக்கப்பட்டுள்ள விபரம்.

தற்காலம் வேண்டுவதை இதனடியில் எழுதுகிறேன்.

அதாவது பொன்னு உரைக்கின்ற உரைகல் ஒன்று வெள்ளி உரைக்கின்ற உரைகல் ஒன்று. இவைகளையும் இவைகளைக்கு அடுத்த தராசு முதலிய கருவிகள் வைக்கின்ற பை ஒன்றும்..

இம்மூன்றும் வாங்கி பங்கியில் அனுப்பவேண்டும். சுமார் 5 பலம்.8 பலம் நிறுக்கத்தக்க தராசு நேரிட்டாலும் அதனுடன் அனுப்பவேண்டும்.எனக் கடிதம் எழுதியுள்ளார். இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது.

சத்திய ஞானசபை கட்டியது வள்ளலார் தன் சொந்த உழைப்பால் தங்கம் தயார்செய்து அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டே சத்திய ஞானசபை கட்டியுள்ளார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

சத்திய தருமச்சாலை!

தருமச்சாலை என்பது பலர் சகாயத்தாலே நிலைபெற வேண்டும். ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள்கோரிக்கை என வள்ளலார் தெரிவிக்கின்றார். 

தருமச்சாலைக்கு மக்கள் பணம் தேவை. ஞானசபைக்கு மக்கள் பணம் தேவை இல்லை என்பது வள்ளலார் கொள்கை

நான்புரி வன எல்லாம் தான்புரிந்து எனக்கே

வான்பதம் அளிக்க வாய்த்த நன்னட்பே! ( அகவல்)

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *