வினைகள் இரண்டு* !

vallalar

*நல்வினை தீவினை எனும் வன்கயிற்றால் ஆட்டுகின்ற தேவ தேவே* என்பார் வள்ளலார்.
நல்வினை
தீவினை

என இரண்டு வகை வினைகள் இந்த உலகம் முழுதும் நிரம்பி உள்ளன.

*தீவினைகளின் செயல்* ..

உலகில் உள்ள உயிர்களுக்கு துன்பம்.துயரம் அச்சம்.பயம்.மரணம் போன்ற காரியங்களை உண்டாக்கினால் அவைகள் தீவினைகளாக நம் ஆன்மாவில் பதிவாகி.மாயையிடம் கொண்டு செல்கிறது. மாயை நமக்கு இறைவனை காட்டாமல் மறைத்துவிடும்.அருள் பெறும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். மேலும் நாம் வாழும் வாழ்க்கையில் துன்பங்களை தந்து. பாவங்களை சுமந்து நரகத்தில் தள்ளிவிடும்.மீண்டும் மனிதப்பிறப்பு கிடைக்க வாய்ப்பில்லாமல் கஷ்டபட நேரிடும்.
இதுவே தீவினையின் செயல்களாகும்.

*நல்வினை என்பது*.

உயிர்களுக்கு எவ்வகையிலும் துன்பம் தராமல் இன்பம் தருவதே நல்வினை யாகும்.அதுவே எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கு துனையாக இருப்பதாகும். இன்பம் தந்து வாழும் மனிதர்களின் ஆன்மாக்களில் நல்வினை பதிவாகி மாயையிடம் செல்லும். மாயை அந்த ஆன்மாக்களுக்கு எந்த துன்பமும் தராமல்.பேரின்பம் பெறுவதற்காக உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அனுப்பிவிடும். நல்வினை பெற்ற ஆன்மாக்களுக்கு அருள் பெறும் வழியைக்காட்டி தன்னிடம் இணைத்துக்கொள்ளும்.மேலும் அருள் வழங்கி .அருள் அனுபவம் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் முத்தேக சித்திபெற்று வாழ்வாங்கு வாழ்வதே நல்வினையின் ஆன்மலாபமாகும்.
எனவேதான் மனித தேகம் கிடைத்த ஒவ்வொரு ஆன்மாவும் ஆன்மலாபம் பெறுவதே.

இயற்கையின் முக்கிய லட்சியமாகும் என்பதை வள்ளலார் வலியுறுத்தி சொல்கிறார். எனவே கனவில் கூட தீவினையை நினைக்காமல் நல்வினைகளையே செய்து ஆன்மலாபத்தை சம்பாதிக்க வேண்டும்.. *ஜீவகாருண்யம்*.! நல்வினை செய்து ஆன்மலாபத்தை சம்பாதிக்கத்தான் ஜீவகாருண்யம் என்றும்.ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றும் வள்ளலார் பதிவுசெய்து ஒரு தனிநூலை எழுதி வைத்துள்ளார்.

*வள்ளலார் பாடல்* !

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும் பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனகவடி வாகிப்
பொன்புடை நன் கொளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.!
மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.
தீமைகளை செய்யாமல் நன்மைகளையே செய்தால் *தீவினை அகன்று நல்வினை ஆன்மாவில் பதிவாகி* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வதற்கு ஆன்மநேய உரிமையுடன் மக்களை அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.
*நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

*அருள் எவ்வாறு பெற முடியும்* !

vallalar

அருள் என்னும் பொக்கிஷத்தை பெறுவது கடவுளின் கருணையால் கடவுளின் தொடர்பால் மட்டுமே பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே . உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அருள் வழங்கும் தகுதி உடைய கடவுள் ஒருவரே ! அவரைக் கண்டு பிடித்தவர் வள்ளலார். அவருக்கு *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் பெயர் சூட்டினார்*. *அவர்தான் தனிப்பெருங்கருணை உள்ளவர் என்பதையும் அறிந்து கொண்டார்*.* அறிவுள்ள உயர்ந்த பிறப்பான மனிதப்பிறப்பு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதே *இயற்கையின் நியதியாகும்*.

இந்த உண்மை அறியாமல் மனித இனம் பிறந்து பிறந்து.இறந்து இறந்து கொண்டே தொடர்கதையாக உள்ளன. *அருளை வழங்கும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி* *ஆண்டவர் ஒருவரே* ! *அவர்தான் எல்லாவற்றையும் படைத்தவர்*. *அந்தக் கடவுளை நாம் தொடர்பு கொள்வதைவிட .அக்கடவுள் நம்மை தொடர்பு கொள்ள வேண்டும்*.அந்த அளவிற்கு நம்வாழ்க்கை.அன்பு. தயவு.கருணை . ஒழுக்கம். தூய்மை சத்தியம் அறிவுடைமை .அருள் பெறும தகுதி உடையதாக இருக்க வேண்டும்.
*ஆன்மாக்கள் எல்லாம் பெண் தன்மை உடையதாகும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆண்தன்மை உடையவராகும்* . எனவே ஆன்மாக்களை ஆண்டவர் விரும்பினால் மட்டுமே அருள் பெறமுடியும். *உலக பற்று உள்ளவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கண்டு கொள்வதே இல்லை*.அவரவர் நல்வினை தீவினைகளுக்கு தகுந்தாற போல் வாழ்க்கை அமைந்து கொண்டே இருக்கும்.

*உலகப்பற்று என்பது மண்ணாசை*. *பெண்ணாசை.பொன்னாசை என்ற மூன்றுக்குள் அடங்கி விடுகின்றது*. மூன்று பற்றும் வைத்துக்கொண்டு ஜீவகாருண்யம் செய்தாலும்.கடவுளை வணங்கினாலும் கடவுள் அருள் கிடைக்க வாய்ப்பில்லை.
கடவுள் அருள் பூரணமாக பெற்றால் மட்டுமே ஊன உடம்பை ஒளி உடம்பாக தோன்ற. அருள் வேதியல் மாற்றம் போல்.பஞ்சபூத உருவத்தை ஒளி உருவமாக மாற்றத்தை உண்டாக்கும். ஒளி உடம்பு பெற்றால் மட்டுமே மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் மரணத்தை வெல்ல முடியும். மரணத்தை வெல்லும் வழியைக் கற்றுக்கொள்வதே சாகாக்கல்வி என்பதாகும்.

*வள்ளலார் பாடல்* !

சார் உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருள் எலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம் செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர் உறவு என்றடைந்து உலகீர் போற்றி மகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!

என்னும் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

*ஜனனவேதனை.நரகவேதனை. மரணவேதனை. பசிவேதனை என்ற நான்கு வேதனைகள்தான் சார் உலக வேதனைகளாகும்*. வேதனைகளுடன் தொடர்பு உடையவர்கள் எக்காலத்திலும் இறைவனிடம் தொடர்பு கொள்ளவே முடியாது என்பதை அழுத்தமாக பதிவு செய்கிறார். *அந்த வேதனைகளே வினைகளாக மாற்றம் அடைகின்றன*. உலகில் உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்றுஅற விட்டதினால் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னிடம் தொடர்பு கொண்டார் அருளை வாரி வாரி வழங்கினார்.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றினார் மரணத்தை வென்றேன்.எல்லாம் செய் வல்லபமும் பெற்றேன் என்கிறார் வள்ளலார்.

எல்லாம் செய்யும் வல்லபம் உடைய தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ஓர் உறவாக்க் கருதி உள்ளம் எலாம் கனிந்து உருகி இடைவிடாது நேசிக்க வேண்டும். இறைவனை தொடர்பு கொள்ள தடையாக உள்ள உலக பற்றுகள் அனைத்தையும் ஆன்மாவில் இருந்து அகற்ற வேண்டும். *அகற்றுவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்*. *எல்லாம் செயல் கூடும் என் அணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து* *!
என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

அருளைப்பெற ஒரே வழி சார் உலக வாதனையை ஒழிக்கவேண்டும் அகற்ற வேண்டும்.விலக்க வேண்டும். காலம் பொன் போன்றது .எனவே காலத்தை வீண் விரையம் செய்யாதீர்கள் என்கிறார் வள்ளலார். இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள் என்று அழுத்தமாக கண்டிப்பாக சொல்லுகின்றார். மரணத்தை வெல்லுவதும் வெல்லாததும் அவரவர் செய்யும் செயல்பாட்டில்தான் அருள் பெறும் பயன்களும் விடைகளும் உள்ளன.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஒளி உடம்பு பெறும் கலை !

vallalar

சாகாத்தலை.!
வேகாக்கால்!
போகாப்புனல்!

என்பதாகும்.இந்த மூன்று கலைகளையும் கற்று தெளிந்து தேர்வு பெற்றால் மரணத்தை வென்று விடலாம். மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழும் சாகாக் கலையைக் கற்று மரணத்தை வென்றவர்.உலகிற்கு கற்றுத் தந்தவர் வள்ளலார்.!
மரணம் இல்லா பெருவாழ்வு என்பது பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட மனித உடம்பை மரணம் அடையாமல். ஒளி ஒலி அணுக்களாக மாற்றம் செய்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். அதாவது பரப்பிரகாசம் பரநாதமாக. காற்று அறியா தீபம் போல் .இந்த அசுத்த பூத காரிய கிடையாது .சுத்த.பிரணவ.ஞான தேகமாக வேதியல் மாற்றம் போல் உரு மாற்றம் அடைய செய்விப்பதே சாகாக் கலை.சாகாக்கல்வியாகும்.

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதை அறியாத ஆன்மீக சிந்தனையாளர்கள். வள்ளலார் வாழ்க்கை முறையை அறியாதவர்கள். திருஅருட்பாவை முழுதும் படிக்காதவர்கள்.வள்ளலார் மீது தவறான் கருத்துக்களை அக்காலத்தில் அள்ளி எறிந்தார்கள்.
அவற்றிற்கு துணையாக வள்ளலார் உடன் இருந்தவர்களும் கண்டு கொள்ளாமலே இருந்துள்ளார்கள்.காரணம் சாதி சமய மதங்களின் மேல் பற்று உள்ளவர்கள்.வள்ளலாரிடம் எதாவது சித்துகளை கற்றுக் கொள்ளலாம் என சுயநல சிந்தனையுடன் இருந்தார்கள்.

எனவேதான் வள்ளலார் சொன்னார்.இதுவரையில் என்னுடனே இருந்தும் பழகியும் நான் சொல்வதை ஒருவரும் புரிந்து கொள்வாரில்லை .சுத்த சன்மார்க்கம் என்றால் ஒருவரும் தெரிந்து கொள்வாரில்லை. மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால் அறிந்து கொள்வாரில்லை என்று உள்ளும் புரமும் வேதனை அடைகிறார். உண்மைக் கடவுள! எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! தான்
எல்லாவற்றையும் படைத்தவர் என்பதை அறிவால் தெரிந்து கொண்டால் மட்டுமே உண்மை தானே விளங்கும்.!

மனிதப் பிறப்பு எடுத்த நாம் எங்கு இருந்து வந்தோம்.மீண்டும் எங்கே செல்ல வேண்டும் என்பது தெரியாமல் சாதி.சமய.மதக் கொள்கைகளை கடைபிடித்து .இவ்வுலகில் வாழ்ந்து மரணம் அடைந்து முன் பின் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இந்த உடம்பை விட்டு பிரிந்து விடுகின்றோம். . நம் உடம்பு கீழே செல்ல வேண்டுமா ? அல்லது மேலே செல்ல வேண்டுமா என்பது தெரியாமல் வாழ்ந்து கொண்டுள்ளோம். நம் உடம்பு கீழே சென்றால் அதற்கு மரணம் என்று பெயர் .உடம்பு அழியாமல் அருளால் ஓளிதேகமாக மாற்றி மேலே சென்றால் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர்.. .மேலே மட்டும் செல்வதில்லை.எங்கு வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் ஊடுருவி செல்லும் அருள் ஆற்றல் பெற்ற ஒளித் தேகத்திற்கு மட்டுமே உண்டு…
அந்த ஒளிதேகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தடுக்க முடியாது.

பஞ்ச பூதங்கள் எல்லாவற்றையும் தாங்குகிறது என்று சொல்லுகிறார்கள் அது உண்மைதான் ஆனாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் எல்லாவற்றையும்.தாங்கி கொண்டும் இயக்கிக் கொண்டும் உள்ளவர். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஏகதேச அருள் ஆற்றலால். பஞ்சபூத உடம்பை தாங்கிக் கொண்டும் இயக்கிக் கொண்டும் உள்ளது ஆன்மா என்னும் சிறிய உள் ஒளியாகும்.ஆன்மா இல்லையேல் உயிரும் உடம்பும் இயங்காது. அதேபோல் எல்லா உயிர்களையும் ஆன்மாக்களையும் தாங்கிக் கொண்டும் இயக்கிக்கொண்டும் உள்ளது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் தனிப்பெருங்கருணை என்ற பேரொளியாகும் என்னும் உண்மையை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் மேல்நோக்கி வளரும் குணம் உடையது ! உயிர் உள்ள பொருள் அனைத்தும் மேல் நோக்கித்தான் வளருகின்றது.. உயிருக்கும் ஆன்மாவிற்கும் எடை(கணம்) வெயிட் இல்லை புவி ஈர்ப்புத் தன்மை கிடையாது
பஞ்ச பூத உடம்பிற்கு எடை அதாவது கணம் உண்டு புவிஈர்ப்பு தன்மை உண்டு எடை இல்லாத உடம்பு மண்ணிற்குள் போகாது. எனவே தான் கணம் உள்ள பஞ்ச பூத அணுக்களான.ஆணவம்.கன்மம்.மாயை.மாமாயை.பெருமாயை என்னும் மலங்களால் பின்னப்பட்ட. மல உடம்பை மலம் இல்லாத அருள் உடம்பாக மாற்ற வேண்டும்.அதுவே மரணம் இல்லாத பெருவாழ்வாகும்.

பூத உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிவதுதான் மரணம் என்பதாகும்.உடம்பு மண்ணுக்குள் கலந்துவிடும். ஆன்மாவும் உயிரும் அதன் நல்வினை.தீவினைக்குத் தக்கவாறு வேறு உடம்பு எடுத்துக் கொள்ளும். எடை கணம் (வெயிட்) உள்ள உடம்பை எடை கணம் வெயிட் இல்லாமல் ஆக்கும் வழியை சொல்லித் தருவதுதான் சாகாக்கலை என்பதாகும். பஞ்ச பூத கருவிகளை தாங்கி வாழும் ஆன்மா கருவிகள் இல்லாமல் ஓளி தேகம் பெற்று வாழும் வகையைக் கற்றுக் கொடுக்கும் கல்விக்கு சாகாகல்வி என்று பெயர் வைத்தார் வள்ளலார்.

பஞ்ச பூத கருவிகள் இல்லாமல் ஆன்மா அருள் ஒளி தேகமாக மாற்றிக் கொண்டால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன்னிடம் சேர்த்துக் கொள்வார். எடை உள்ள உடம்பை, எடை இல்லாத (ஆகாயம் போல்) உடம்பாக மாற்றிக் கொள்வது எப்படி ?
அருள் ஒளிக்கு எடை இல்லை ,அதுபோல் உடம்பையும் அருள் ஒளியாக மாற்றிக் கொண்டால் கணம் இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லும் ஆற்றல் அருள் ஒளிபெற்ற ஆன்மாவிற்கு உண்டு… *அதற்கு ஆன்மதேகம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்*. இதைத்தான் ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதம் நல்கிய நாயகனே என்கிறார் வள்ளலார்..ஒளி உடம்பிற்கு ஜீவ சமாதியோ மரணமோ மறுபிறப்போ.முக்தியோ கிடையாது.
ஒளி என்பது சாதாரண .அக்கினி.சூரியன்.சந்திரன். நட்சத்திரங்கள் போன்ற வெளிச்சம் அல்ல .அது ஆற்றல் மிகுந்த அருள் ஞான ஒளி என்பதாகும்.

அது சூடும் தரும் ஒளி அல்ல அது சுடாத ஆற்றல் என்னும் அருள் சித்தி பெற்ற சக்தி என்னும் ஒளியாகும். கருவிகளைக் கொண்டு எரியும் ஒளி அல்ல .எந்தக் கருவிகளும் இல்லாமல் எரியும் ஒளி அதாவது காற்று அறியா தீபம் என்பார் வள்ளலார்.நிழல் அறியா தேகமாகும். அருளைப் பெற்றால் மட்டுமே உடம்பை ஒளியாக மாற்ற முடியும். அதற்கு இரண்டே வழிதான் வள்ளலார் சொல்லி உள்ளார். ஒன்று இயற்கையான உயிர் இரக்கம் என்னும் ஜீவகாருண்யம். ஒன்று இயறகை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளும் சத்விசாரம். உயிர்கள் இடத்தில் இரக்கமும் .கடவுள் இடத்தில் அன்பும் செலுத்தினால் மட்டுமே தனிப்பெருங்கருணை என்னும் அருள் பெற்றுக் கொள்ளமுடியும்.

இரக்கமும் அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும்.செயற்கையாக இருக்கக் கூடாது. எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! என்பார் வள்ளலார்… மேலும் …. ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம். என்பார் வள்ளலார் உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே ! என்பார்.

அறிவு என்பது எங்கு உள்ளது. ஆன்ம சிற்சபையில் உள்ளது.
அறிவு வெளிப்பட்டால் தான் அருள் அறிவு வெளிப்படும்
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்றும்.
அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்றும்
அருள் வடிவே ஒளி வடிவம் என்றும்
அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை அருளைப் பெருவதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உறவு வேண்டும். அந்த உறவிற்கு அன்பு.தயவு.கருணை.நேர்மை.உண்மை.ஒழுக்கம் வேண்டும். வள்ளலார் வேண்டுதல் பாடல்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை நினது அருட் புகழை இயம்பி யிடல் வேண்டும்.
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும் .
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !

என்றும் அடுத்த பாடல் !

அருளா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகம் எல்லாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்.
இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பம் அடைதல் வேண்டும்
பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டுவனே !

என்னும் பாடல்களின் வாயிலாக வள்ளலாரின் உண்மையான வேண்டுதலை கேட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் மோட்சவீட்டின் கதவைத் திறந்து அதாவது அருள் கதவைத் திறந்து அருளை வாரி வாரி வழங்குகிறார். அசுத்த ஜீவ தேகமானது .அருள் வல்லபத்தால் .சுத்த தேகம்.பிரணவ தேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்தியை.அருள் பூரணத்தை பெறுதலே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.

வள்ளலார் பாடல். !

கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவு திறந்திடப்பெற்றேன் காட்சி எல்லாம் கண்டேன்
அடர்கடந்த திருஅமுது உண்டு அருள்ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவுருவாய் அழியாமை அடைந்தேன்
உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஒங்கினவே
இத்தனையும் பொது நடஞ்செய் இறைவன் அருட்செயலே !

மேலும்.

காற்றாலே புவியாலே ககனமதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளிந்தான் எனக்கே
ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகில்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

மேலே கண்ட பாடலின்படி எந்த சக்தியாலும் தன் உடம்பை அழிக்கமுடியாத அருள் தேகத்தைப் பெற்றவர் வள்ளலார்.

அருட்பெரும்ஜொதி ஆண்டவரின் தனிப்பெரும்கருணையால்.மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வில் வள்ளலார் வாழ்ந்து கொண்டு உள்ளார் மனித தேகம் பெற்றவர்கள் அனைவரும் அறிந்து.புரிந்து.தெரிந்து கொண்டு வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நிச்சயம் மரணத்தை வென்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வாங்கு வாழலாம். தன்னுயிரைக் காப்பாற்ற பிற உயிர்களை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். தான் வாழ பிற உயிர்களை வாழ வைக்க வேண்டும்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க ! சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றெனை.! போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி!

ஞானசரியை முதல் பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலே கண்ட ஒருபாடலே போதுமானதாகும். சாதி சமய மதம் அற்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடிக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஒரு உடலுக்கு ஒரு உயிர் !

vallalar

உலகில் உள்ள எந்த ஜீவராசிகளாய் இருந்தாலும் உடம்பிற்குள் ஒரு உயிர் தான் இருக்க முடியும். அதேபோல் இந்த உலகத்தை இயக்க ஒரே கடவுள்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும்.

வள்ளலார் பாடல்.

உருவ ராகியும் அருவின ராகியும் உரு அருவினராயும்
*ஒருவரே உளார் கடவுள் கண் டறிமினோ*
உலகுளீர் உணர்வின்றி
இருவராம் என்றும் மூவரே யாம் என்றும் இயலும்
ஐவர்கள் என்றும்
எருவராய் உரைத் துழல்வதென் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.!

மேலே கண்ட பாடலில் வள்ளலார் ஒரு கேள்வி கேட்கிறார்.

உடம்பிற்குள் ஒரு உயிர் இருந்து இயங்கும் போது . அந்த உடம்பில் இரண்டு மூன்று உயிர் இயங்குகிறது என்றால் எவ்வளவு அபத்தமோ ? அதேபோல் இந்த உலகத்தை இயக்கும் கடவுள் ஒருவர் தான் இருக்க முடியும் என்பதை உணர்ந்து.தெரிந்து கொள்ள முடியாமல். இரு கடவுள் என்றும்.மூன்று கடவுள் என்றும் ஐந்து கடவுள் என்றும் சொல்லுவதும் நம்புவதும். வழிபடுவதும் எவ்வளவு பெரிய அறியாமையாகும் என்று வள்ளலார் வருத்தப்பட்டு புரிய வைக்கிறார். மக்கள் ஒரே கடவுள் என்ற உண்மை தெரியாமல் பல கடவுள்களை வழிபட்டு வாழ்ந்து வந்த மனிதர்களுக்கு உண்மையான கடவுள் யார்? அவர் எங்கே இருந்து இயங்கி கொண்டுள்ளார் என்பதை கண்டுபிடித்தவர் வள்ளலார். அவருக்கு உண்மையான பெயர்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி!!!!

என்னும் பெயர் வைத்து.அவற்றை *மகா மந்திரச்சொல்லாக* சொல்லி வழிபட வேண்டும் என்று மக்களுக்கு வழிகாட்டி போதித்து உள்ளார். கடவுளுக்கு உருவம் கிடையாது.ஒளியாக உள்ளார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த. கடலூர் மாவட்டம் வடலூர் என்னும் ஊரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார்.

அங்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒளிவடிவமாக காட்சித் தந்துகொண்டுள்ளார். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மை குணம் செயலைப்பற்றி ஒருசில பாடல்கள் !

வள்ளலார் பாடல்!

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கி இன்ப மயமாய்
*உயத்தரும் ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே*
*ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்*.!

*மேலும் ஒருபாடல்* *!

ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் *அரும்பெருஞ்சோ தியினார்*
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறு தாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படித்தாலே போதும் விளக்கம் சொல்லாமலே புரியும்படி எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார். தெரிந்து கொள்ளலாம்.

வள்ளலார் கொள்கையை பின் பற்றுகின்ற சன்மார்க்கிகள்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்பதை சத்திய வாக்காக ஏற்று ஒளியை மட்டும் வழிபடவேண்டும். ஜீவகாருண்யமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் நம் இரண்டு கண்கள் போல் பாவித்து பின்பற்றி வாழ்ந்து வந்தால்.எதிர்பார்க்காத அன்பும்.தயவும். கருணையும் அருளும் நம்மை ஆட்கொள்ளும். எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் .வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்.

இது சத்தியம்! சத்தியம்.சத்தியம் ஆண்டவர் கட்டளை !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

மரணபயம் தவிர்த்த வாழ்க்கை.!

vallalar

வள்ளலார் பாடல் !

அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
எமன் எனும் அவன் இனி இலை இலை மகனே
எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

*உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் மரண பயத்துடன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளன*. மரணம் என்பது இயற்கையானது.ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்பது. என்றும் உள்ள வழக்கச் சொல்லாகும். *மரணம் வரும் என்பது தெரிந்தும்.மரண பயத்துடன் மனிதன் வாழ்ந்து கொண்டுதான் உள்ளான்*. மரணத்தில் இரண்டு வகை உள்ளன. *இயற்கை மரணம்.செயற்கை மரணம்*.வயது முதிர்ந்து நோய்வாய்பட்டு உயிர் பிரிவதை இயற்கை மரணம் என்றும்.தற்கொலை செய்து கொள்வது. பலவகையான ஆபத்துகளால் அகால மரணம் வருவதை செயற்கை மரணம் என்றும் சொல்லப்படுகிறது.

மரணம் என்பது பலவழிகளில் வருகிறது.ஐந்து பூதங்களாலும்..கிரகங்களாலும்..கொலைக் கருவிகளாலும். பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலும்.கொரோனோ வைரஸ் போன்ற அணுக்களாலும்.அணு ஆயுதங்களாலும்.உடம்பைவிட்டு உயிர்கள் பிரிந்து விடுகின்றன. *உடம்பை விட்டு உயிர் பிரிவதை மரணம் என்கிறோம்*. *மரணம் வருவதை எமன் வந்து உயிரைப் பறித்துவிட்டான்* என்பது தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள செய்திகளாகும்*. *எமன் என்பதை வள்ளலார் மறுக்கவில்லை.*
மரணம் தானாக வருவதில்லை.அஜாக்கிரதையாலும்.அறியாமையாலும் *செயற்கையால் மரணம் வருகிறது* என்கிறார் வள்ளலார்.

மனிதவாழ்க்கைக்கு வேண்டிய எல்லா அறிவியல் ஆராய்ச்சி மூலமாகவும்.செயற்கை வசதிகளையும் கொண்டு கண்டுபிடித்த உயர்ந்த அறிவுள்ள மனிதன்.உடம்பைவிட்டு உயிர் பிரியாமல் இருக்கும் *அருள் அறிவியல்* உண்மையைக் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள். மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடிக்க ஆன்மீக அருளார்களும் அறிவியல் மேதைகளும் மற்றும் விஞ்ஞான வல்லுனர்களும் முயற்சி செய்து மரணத்தை வெல்லும் *சூழ்ச்சி* அறியாமல்.தோல்வியைக் கண்டார்கள்.
வள்ளலார் வந்துதான் மரணத்தை வெல்லும் வழியையும் அதன் சூழ்ச்சியும் கண்டுபிடித்தார்.எமன் என்னும் கூற்றுவன் தன்னை அனுகாமல் பயந்து ஓடும் வழியைக் கண்டுபிடித்து வாழ்ந்து காட்டியுள்ளார். அவற்றிற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும்.முத்தேக சித்தி என்றும். பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயர் வைத்துள்ளார்.

உயர்ந்த அறிவுள்ள மனித்தேகம் கொடுக்கப்பட்டதே மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழ்வதற்கே என்பதை அழுத்தமாக ஆணித்தரமாக அறிந்து உணர்ந்து தெரிந்து வாழ்ந்து வழிக்காட்டி உள்ளார் வள்ளலார். *மரணத்தை வெல்லுவது என்பது ஏதோ மாயாஜால வேலை அல்ல*. அணுக்களால் உருவான பின்னப்பட்ட ஊன உடம்பை அருள் ஒளி உடம்பாக மாற்றுவதே மரணத்தை வெல்லும் வழியாகும். அருள் வழங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.அவரைத் தொடர்பு கொள்ள நான்கு ஒழுக்கங்களை மனிதன் கடைப்பிடித்து வாழவேண்டும்.

*அவை இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்பவைகளாகும்*.

நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடிப்பவர்களை நோக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரிடையாக வந்து அருள் வழங்குவார். நான்கு ஒழுக்கங்களை முழுமையாக கடைபிடித்து அருளைப் பூரணமாகப்பெற்று *மரணத்தை வென்ற ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே* !

வள்ளலார் பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!

என்னும் பாடலிலே.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இரவு 12 மணிக்கு நேரிலே வந்து வள்ளல்பெருமானை எழுப்பு உள்ளத்திலே நுழைந்து கலந்து அருளை வழங்கி்.ஊன் உடம்பை ஒளிஉடம்பாக மாற்றி எனக்கு என்றும் அழியாத *பேரின்ப நிதியாகிய அருளை* வழங்கியதை சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லாமல் ஆனந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டுள்ளேன். எனக்கு அளித்தது மட்டும் போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையுடன். பொது நோக்கத்தோடு விண்ணப்பம் செய்கிறார்.

மரணம் பயம் வராமல் இருக்க எமன்எனும் கூற்றுவனை நெருங்கவிடாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும்.மரணபயம் வராமல் வாழவேண்டும்!

வள்ளலார் பாடல் !

கரணம்மிகக் களிப்புறவே கடல் உலகும் வானும்
கதிபதி என்று ஆளுகின்றீர் அதிபதியீர் நீவிர்
மரணபயம் தவிராதே வாழ்வதில் என் பயனோ
மயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே
திரணமும் ஓர் ஐந்தொழிலைச் செய்ய ஒளி வழங்கும்
சித்திபுரம் எனஓங்கும் உத்திர சிற் சபையில்
சரணம் எனக் களித்து எனையும் தானாக்க எனது
தனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.!

கடல் உலகம் வானம் போன்றவற்றை ஆளுகின்ற ஆதிபதிகளாக இருந்தாலும் மரண பயத்தோடு வாழ்வதால் எந்த பயனும் இல்லை. பட்டம் பதவி புகழ் அதிகாரம் எல்லாம் புறம் புறத்தில் உள்ள இந்திரியங்கள் கரணங்கள் மட்டுமே மகிழ்ச்சி அடைகின்றது. அகத்தில் உள்ள ஆன்மாவோ.அகப்புறத்தில் உள்ள ஜீவன் என்னும் உயிரோ மகிழ்ச்சி அடைவதில்லை..

இந்திரியம்.கரணம். ஜீவன்.ஆன்மா என்னும் நான்கு ஒழுக்கங்களும் ஒன்றுசேர பூரணமாக முழுமைப் பெற்றால்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து அருளை வழங்கி மகிழ்ச்சி அடைய செய்விப்பார். வள்ளலார் சொல்லி உள்ள இந்த உண்மை தெரியாமல் பலபேர் பலவிதமாக சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள். *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே துணையாக இருந்து அனைவருக்கும் நல்வழிகாட்ட வேண்டும்.* எனவே எமனை நெருங்கவிடாமல் மரணம்பயம் இல்லாமல் வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

*சாதியை விடாமல் ஜோதி காண முடியாது*

vallalar

சமய மதங்களின் பிரதிபலிப்பே சாதி என்பதாகும். *சமய மதங்களை கூட மக்கள் விட்டுவிடுவார்கள் “சாதியை விடமுடிவதில்லை* மனிதன் உள்ளத்தில் குடிகொண்டு சவாரி செய்வதே சாதி.சமயம்.மதங்களின் கொள்கைகளாகும்.. *இவை ஆன்மாவில் பதிவாகி நிறைந்துள்ளது*. ஆன்மாவில் பொய்யை நிரப்பிக் கொண்டு உள்ளதால் மெய்ப்பொருளைக் காணமுடியாமல்.அவற்றைத் தொடர்பு கொள்ள முடியாமல் அருளைப் பெற முடியாமல் மாண்டுகொண்டே உள்ளார்கள். ஆன்மாவை அறிந்து கொள்வதே ஆன்மீகம் என்பதாகும்.

கோயில். ஆலயம்.மசூதி.சர்ச். மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் என்று போற்றப்படும் இடங்களுக்கு சென்று உயிர் அற்ற ஜடப் பொருளை வழிபடுவது ஆன்மீகம் அல்ல. உயிர் உள்ள ஜீவன்களான சித்தர்கள் யோகியர்கள் ஞானிகளை வழிபடுவதும் ஆன்மீகம் அல்ல.
சாதி சமயம் மதத்தினால் பிரித்து பிளவுப்பட்ட ஏழை எளிய மக்களின் துன்பம் துயரம் அச்சம் பயத்தை போக்குவதே ஆன்மாவை அறிந்துகொள்ளும் பாதையாகும். அடுத்து தன்னை அறிந்து இன்பம் அடைந்தால் தலைவனை அறியலாம்.எனபதே ஆன்மீகப் பாதையாகும்.

தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே என்றும். சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி ! என்னும் அகவல் வரிகளில் உண்மையை முதன்முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார். ஆறு அந்தகளால் மதங்களால் தோன்றின. மதங்களால் சமயங்கள் தோன்றின. சமயங்களால் சாதிகள் தோன்றின. தொழில்களுக்காக சாதிகளைப் பயன் படுத்தினார்கள். தொழிலை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்தார்கள்.

தொழில் சார்ந்த இனத்தில் பொருளை ( பணம்) வைத்து.பொருள் உள்ளவனை பணக்காரன் என்றும்.பொருள் இல்லாதவன் ஏழை என்று பிரித்தார்கள். கீழ்த்தரமான தொழில்களான. ஊரில் உள்ள தெருக்களை துப்புறவுசெய்தல். மலம் அள்ளுதல்.இறந்துபோன பிராணிகளையும். மனிதர்களையும் கொண்டுபோய் அடக்கம் செய்தல். .எரித்தல் போன்ற கீழ்த்தரமான தொழில்களை செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தும். சக மனிதர்களை மனித நேயம் இல்லாமல் சாதி இனம் மொழிகளால் பிரித்து வைத்தும் கேவலப்படுத்தியும் நடைமுறையில் தீர்க்கமுடியாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தி நடந்து கொண்டு வருகின்றது. இவை எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரிலும் கடவுள் பெயரிலும். ஆச்சார சங்கற்ப விகற்பங்களால் வேறுபடுத்தி பிரித்து வைத்துள்ளார்கள்.

மனிதர்கள் வணங்கும் வழிபடும் கடவுள்களையும் ஏழைச்சாமி. பணக்காரச்சாமி என்றும் சைவசாமி அசைவசாமி என்றும்.கொலை கேட்கும் கடவுள் .கொலை கேட்காத கடவுள் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள். இவைகள் யாவும் இன்று நேற்று வந்தது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது.. இதைத்தான் வள்ளலார் சமூகப் பார்வையோடு சாடுகிறார்.சமூகம் என்பது ஆன்மீகத்தோடு பின்னி பினைந்தது. ஆன்மீகம் வேறு.சமூகம் வேறு அல்ல. எல்லாமே இறைவனால் படைக்கப்பட்டது.
வேற்றுமையை உண்டாக்க கடவுள் காரணம் அல்ல.

பாவம் புண்ணியம் காரணம் அல்ல. யார் காரணம் ?

ஆதியிலே உயர்ந்த சாதி என்று சொல்லுகின்ற மனிதர்கள் செய்த சூழ்ச்சியே காரணமாகும்.இந்த சூழ்ச்சியின் பின்னணியை மனிதர்களுக்கு புரியவைத்து.தெளிவுப்படுத்தி.உண்மையை எடுத்துரைத்து.சாதி சமயம் மதம் போன்ற பற்றுகளில் இருந்து வெளியேற்றி. மக்களை நல்வழிப்படுத்தி மனிதநேயம் ஆன்மநேயத்தை போதிக்க வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். அக்காலத்திலும் சாதி சமயம் மதங்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் நிறையபேர் உண்டு. ஆண் பெண் என்ற இரண்டு சாதிதான் என்று பிரித்து சொன்னார்கள்.

சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்கள். மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தார்கள் என சொன்னார்கள். உயிர் உள்ளது உயிர் இல்லாதது என பிரித்தார்கள். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சொன்னார்கள்.
உயிர்க்கொலை செய்பவர்கள்.உயிர்க்கொலை செய்யாதவர்கள் என பிரித்தார் வள்ளலார் அதற்குமேலும் ஆணும்அல்ல.பெண்ணும் அல்ல.அலியும்அல்ல என்றும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரேத் தன்மை உடையது *ஆன்மா என்பதை அறிந்து *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையை பின் பற்ற வேண்டும் என்னும் உண்மையை அழுத்தமாக பதிவு செய்தவர்தான் நம் அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.

*நாம் அனைவரும். ஆன்ம குலம் ஒன்றே என்று அறிவதே உண்மையான ஆன்மீகம்.* வள்ளலார் பேருபதேசத்தில் தெளிவாக பதிவு செய்கிறார். ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. என்கிறார். அதன் உள் அர்த்தம் என்னவென்றால் அவன் சூதாக பூட்டிய பூட்டை இப்போது நான் உடைந்த எரிந்துவிட்டேன் என்கிறார்.
இனி கடவுள் பெயரால் தவறு செய்ய வாய்ப்பு இல்லை.அப்படி மீறியும் செய்வார்களேயானால் *கொரோனோ* போன்ற பலவிதமான தொற்று தொற்றி தீராத துன்பம் அனுபவிக்க தனிமையில் தள்ளப்படுவார்கள்.

வள்ளலார்பாடல்!

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

மேலும்.வள்ளலார் பாடல் !

சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த
*சாத்திரக்குப் பைகள்* எல்லாம் பாத்திரம்அன் றெனவே
ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்
ஓதிஉணர்ந் தோர் புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன் சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்
சோதிநடத் தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்
சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!.

*சாதி.சமயம் மதம்.சாத்திரம் போன்ற குப்பைகளில் இருந்து விடுபடாதவரை இறைவன் தொடர்பும் கிடைக்காது. அருளும் கிடைக்காது* என்ற உண்மைநிலையை ஆதியில் என் உள்ளத்தில் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்.
அதன்பிறகு *எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால்* சமரச சுத்த சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காண பெற்றேன் என்கிறார்.

மேலும் வள்ளலார் பாடல் !

*சாதி சமயச் சழக்கை விட் டேன்* அருட்
சோதியைக் கண்டேனடி அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.! என்கிறார்.

மேலும் ..

சாதி குலம் சமயமெலாம் தவிர்த்தெனை மேல் ஏற்றித்
தனித்த திரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே
ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்
ஆருயிர்கள் அகம்புறம் மற் றனைத்தும்நிறை ஒளியே
*ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க* *எனைத்தான்*
*ஓதாமல்* *உணர்ந்துணர்வாம்* *உருவுறச்செய் உறவே*
சோதி மய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்
தூயநடத் தரசே என் சொல்லும்அணிந் தருளே.!

இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாக சாதி சமயம் மதத்தின் குறைபாடுகளை தவறுகளை சுட்டிக்காட்டி. அவற்றின் பற்றுகளை அகற்ற வேண்டும் என்கிறார். உண்மை உணர்ந்து துணிவோடு அகற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.

*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்* எவை என்பதைப்பற்றி வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார். *அனைத்து சன்மார்க்க சங்கங்களிலும் ஜோதி வழிபாட்டில் நாம் தினமும் சொல்லுகிறோம்*. எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,
வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய *ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! மேலே கண்ட விண்ணப்பத்தை தெரிந்து சொல்கிறோமா ? தெரியாமல் சொல்கிறோமா ? அந்த வாசகத்தில் உள்ளபடி பின்பற்றுகிறோமா ? இல்லையா ? என்பதை சிந்திக்க வேண்டும்.
வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதே சாதி சமயம் மதம் என்ற பற்று இல்லாதது.என்பதை அறிவால் அறிந்து கொண்டால் பற்றை தூக்கி எறிய தயங்கமாட்டோம்.

பற்றிய பற்று அனைத்தும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்று சொல்லுகின்றார். *நாம் எங்கே சென்று கொண்டுள்ளோம் எவற்றை நோக்கிசென்று கொண்டுள்ளோம் என்பதே ஒன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது*.

வள்ளலார் பாடல்!

அச்சாநான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
*இச்சாதி சமயவிகற் பங்களெலாம்* தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.!

என்று இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். இவ்வளவு பாடல்களிலும் விண்ணப்பங்களிலும் எழுதிவைத்தும் நாம் சாதி சமய மதப் பற்றுகளில் இருந்து வெளியே வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை. நம்மால் பற்றுகளை விடமுடியாவிட்டாலும் சுத்த சன்மார்க்கத்தின் உண்மை அறிந்து புதியதாக வரும் அன்பர்களைக் குழப்பாமல் வழிவிட்டு ஒதுங்கிக்கொள்வது நாம் செய்யும் பெரிய புண்ணிய நற்காரியமாகும். தடைகளை நீக்குவோம்! திரைகளை அகற்றுவோம்! அருளைப் பெறுவோம்.! மரணத்தை வெல்வோம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

*ஒருமையில் உலகம் எல்லாம் ஓங்குக!*

Vallalar

ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயமாய்.பிரிவினை இல்லாத. பேதமில்லாத உலகமாய். ஒற்றுமையாய் உலகம் எல்லாம் ஒரே கொள்கையைப் பின்பற்றி.ஒரேத் தன்மையாய் ஒரே சமநோக்கோடு சீராய் மனிதகுலம் மகிழ்ச்சி யுடன் வாழ்வேண்டும் என்பதே வள்ளலாரின் வேண்டுகோளாகும். பலவகையான சாதி சமயம் மதக் கொள்களைக் கொண்ட இவ்வுலகில் இவை எப்படி சாத்தியமாகும் ? எந்த வழிமுறையில் சரிசெய்து நடைமுறைப் படுத்த முடியும் ? இவற்றை சமநோக்கான செயல்பாட்டிற்கு எவ்வாறு கொண்டுவர முடியும். என்பைதை சிந்தித்து பல அறிஞர் பெருமக்கள்.

சிந்தனையாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் பல புரட்சிக் கருத்துக்களை எடுத்துரைத்தும். அவற்றிற்காக போராடியும் வெற்றிபெற முடியாமல் தோல்வியே கண்டார்கள். இன்னும் பல சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டும் வருகிறார்கள். *வள்ளலார் கொண்டுவந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*. *முடியாததை வள்ளலார் எப்பொழுதும் சொல்லமாட்டார்*. *வள்ளலார் வாக்குகள் யாவும் அருள் வாக்காகும்*.

வள்ளலார் பாடல் !

அத்தா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ் சோ தியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்*
*ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்*
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.!

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்பதே வள்ளலாரின் கொள்கையாகும்.

அவரின் உண்மையான பேராசையாகும். உலகின் பழைய வரலாற்றை. பழைய சமுதாயத்தை. பழைய குப்பைகளை அகற்றி.உலகம் முழுவதிலும் புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையைத் தோற்றுவித்து புதிய சமுதாயத்தை புதிய வரலாற்றை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். இதுவே *இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்*.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன் றே அதுதான் சமரச சன் மார்க்கச்
சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

மேலே கண்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க திருநெறியின் வாயிலாக புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.என்பதே வள்ளலாரின் எண்ணத்தில் எழுந்த எழுச்சியாகும்.

*வள்ளலார் பாடல் !*

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமை கொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி
என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.!

உலகமே ஒருமையில் ஓங்கவும். பெருமை பெறும் சுத்த சன்மார்க்கத்தின் பெரும் புகழை பெரியவர்கள் எல்லாம் சூழ்ந்து பேசிமகிழவும் இம்மை இன்ப வாழ்வும். .மறுமை இன்ப வாழ்வும் .பேரின்ப வாழ்வும் பெற்று ஆனந்தமுடன் வாழ்வாங்கு வாழவும் அருள் வழங்க எழுந்து அருள்வாய் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற வேண்டும். உலகில் இயங்கிக் கொண்டுள்ள கருணை இல்லா ஆட்சியை இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் முதல் பணியாகும்.

*வள்ளலார் பாடல் !*

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க –
தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து.
எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல். சாதி.சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் சரி சமமான வாழ்க்கையும்.மகிழ்ச்சி நிறைந்த வசதியோடும் ஒற்றுமையாய் ஒருமையுடன் வாழ வேண்டும்.அப்போதுதான் அனைவரும் இசைந்து வாழமுடியும்.
*சரிசமம் என்றால் எங்கனம் எவ்வாறு !*

உலகில் உள்ள ஒவ்வொருவரும் தாம் செய்யும் தொழிலும். பொருளாதாரம் தான் ஏற்றத்தாழ்வை நிர்ணயம் செய்கிறது. மக்களில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்து வைத்து இருக்கின்றது. *இவற்றை சமப்படுத்த ஒரேவழி*
உலகில் உள்ள அனைவருக்கும் *தாம் செய்யும் தொழிலில் வித்தியாசம் வேறுபாடு இருக்கலாம்.ஆனால் ஊதியத்தில் பொருளாதாரத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது.* உலகில் உள்ள அனைவருக்கும் *ஒரே சம்பளம் ஒரே ஊதியம்* என்ற நிலை வரவேண்டும்.
*சாதாரண கக்கூஸ் துப்புறவு செய்பவராக இருந்தாலும்.உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக இருநதாலும் ஒரே சம்பளமாக ஒரே ஊதியமாக இருக்க வேண்டும்*.

*செய்யும் தொழிலில் வித்தியாசம் இருக்கலாம் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது* எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நிலை வந்தால் சமரசம் என்பது தானே வந்துவிடும். இதைத்தான் வள்ளலார் *ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும்* எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்றார்.. ஒரே உலகம். ஒரே கடவுள் .ஒரே ஆன்மகுலம் . ஒரே கொள்கை. ஒரே ஊதியம். ஒரே சமமான வாழ்க்கை. ஒரேத் தன்மையான மகிழ்ச்சி வந்துவிட்டால்.
உலகில் எல்லைத் தகராறு. தீவிரவாதம். பயங்கரவாதம். நக்சல்பார்ட்டி.லஞ்சம் லாவண்யம் . கொலை கொல்லை. கற்பழிப்பு . சொத்து அபகரித்தல்.ஏமாற்றுதல். தீங்கு விளைவித்தல். உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன்.பொய். சூதுவாது.
பொறாமை. போன்ற எந்த இடையூறுகளும் மக்கள் மனதில் தோன்றாது.

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் வேற்றுமைக்கு இடமேஇல்லை.இது நடக்குமா ? என நினைக்கலாம் கண்டிப்பாக நடக்கும். இவற்றை சரிசெய்ய கொஞ்ச காலமாகும். இதுவே நடுநிலையான ஆட்சி நடத்தும் வழிமுறைகளாகும்.

வள்ளலார் பாடல் !

நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.!

என்னும் பாடலிலே நடுநிலை இல்லா ஆட்சியின் கூட்டத்தைக் கண்டும். கேடு விளைவிக்கும் அதிகாரத்தைக் கண்டும்.அதனால் மக்கள் படும் துன்பம்.துயரம் அச்சம் .பயம் போன்றவைகளால் வரும் இன்னல்களை நினைத்தும்.பார்த்தும்.கேட்டும். நடுநடுங்கி பயந்தேன் என்கிறார் வள்ளலார். இறைவன் படைத்த உலகில் இறைவனால் அனுப்பிய ஆன்மாக்கள்.இறுதியாக மனித தேகம் எடுத்து *அறம் பொருள் இன்பம் வீடு* என்ற நான்கையும் நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து.
பின்பு அவற்றை முழுவதும் பற்றுஅற விட்டு விட்டு .இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.இயற்கையின் சட்டமாகும்.
இயற்கை சட்டத்தை மீறி மனிதர்களால் புதிய சாதி சமயம் மதம் போன்ற துன்மார்க்க சட்டத்தை உருவாக்கி மக்களை துக்கம் துன்பம் என்ற நரகத்தில் தள்ளி விட்டார்கள்.

*வள்ளலார் பாடல்*!

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

என்கிறார் வள்ளலார்.

நினைத்துகூட பார்க்க முடியாத.சிந்திக்க முடியாத எதிர்பார்க்க முடியாத. பண்ணாத தீமைகளை உருவாக்கி. பைத்தியக் காரத்தனமாக வாழ்ந்து கொண்டு இருக்கும். வாழ வைத்துக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும். மனித குலத்தை. மனிதனால் உருவாக்கிய அதிகாரத்தை மாற்றி புதிய சமுதாயத்தை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெரும் பொதுக் கொள்கையாகும்.

வள்ளலார் பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந்
திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

இது நானாக சொல்லவில்லை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி சொல்லுகின்றேன்.இனி வரும்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார் வள்ளலார். எனவே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படவில்லை என்றால். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் நிச்சயம் ஓரம் கட்டப்படுவார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

*கடவுள் நம்பிக்கை வேண்டும்.*

vallalar

கடவுள் நம்பிக்கை வேண்டும்.மூடநம்பிக்கை கூடாது! கடவுளின் பெயரால் மூடநம்பிக்கை வைப்பது கண்மூடித்தனமானது. என்பதை வள்ளலார் பாடல் மூலம் அறியலாம்.

வள்ளலார் பாடல் !

எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச் சாத் திரங்கள்
எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம் ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்
உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.!

என்னும் பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.! என்பதை அறியாமல்.மதங்கள்.சமயங்கள் சாத்திரங்கள் சொல்லும் பொய்யான கடவுள்களையும்.பொய்யான வழிபாட்டு முறைகளையும்.உண்மை என்று நம்பி கடைபிடித்து மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள். எப்படி என்றால் குருடன் யானையைத் தொட்டு பார்த்து சொன்ன கதைபோல் உலகம் முழுவதும் தவறான கடவுள் கொள்கையை பின்பற்றி மாண்டு கொண்டு உள்ளார்கள்.
உண்மையான கடவுளைத் தொடர்பு கொண்டு வாழ்ந்து இருந்தால் மனிதன் சாகாவரம் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ்ந்து இருப்பார்கள்.

இக்காலத்தில் உலகிற்கு உண்மைக்கடவுளை வரவழைத்து அருளைப் பெற்று மரணத்தை வென்று.ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரே அருளாளர் நமது வள்ளல்பெருமான் ஆவார்கள். வள்ளலார் அருள் வாய்மொழி !
சன்மார்க்கப் பெரும்பதி வருகை . பிரஜோற்பத்தி வருடம் சித்திரை மாதம் 12 ம் தேதி – 12 .4 . 1871 . வெளியிட்டது. சுத்த சிவ சன்மார்க்கம் ஓன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் . இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை . தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந்தொட்டு அளவிறந்த நெடுங்கால வரையில் வழங்கும் . அதன்மேலும் வழங்கும் .

பலவகைப்பட்ட சமய பேதங் களும் , சாத்திர பேதங்களும் , ஜாதி பேதங்களும் , ஆசார பேதங் களும் போய் சுத்தசன்மார்க்கப் பெருநெறி யொழுக்கம் விளங்கும் . அது கடவுள் சம்மதம் . இது 29 மாதத்திற்கு மேல் .. இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கா்த்தா்கள் , மூா்த்திகள், கடவுளா் , தேவா் , அடியார் , யோகி , ஞானி முதலானவா்களில் ஓருவரல்ல . இப்படிச் சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும் , எல்லாத் தேவா்களும் , எல்லாக் கடவுளரும் , எல்லாத் தலைவா்களும் , எல்லா யோகிகளும் , எல்லா ஞானிகளும் , தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிற்பார்க்கின்றபடி எழுந்தருளு கின்ற தனித்தலைமைப் பெரும்பதி .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் . பெறுகின்றேன் . பெற்றேன் . என்னை யடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையுமில்லை . பெறுவீர்கள் .பெறுகின்றீா்கள்.பெற்றீா்கள் அஞ்சவேண்டாம் .என வள்ளலார் பதிவு செய்து உள்ளார். எனவே வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்களும்.மற்றும் உலகியலில் உள்ள கிருத்துவம்.இஸ்லாம்.பவுத்தம். இந்தியாவில் உள்ள சைவம்.வைணவம் போன்ற எல்லா ஆன்மீக சிந்தனையாளர்களும். கடவுள் ஒருவரே ! அவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்ற உண்மை உணர்ந்து.சாதி.சமயம்.மதம் போன்ற பொய்யான ஆன்மீக சிந்தனையில் இருந்து விலகி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டால் பெறவேண்டிய ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்..
இப்போது உலகம் முழுவதும் துன்பப்படுவதற்கு காரணம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை.தெரிந்து கொள்ளாததும் தொடர்பு கொள்ளாததும் முக்கிய காரணமாகும்.

உண்மை உணர்ந்து நன்மை அடைவதற்கு ஒரே வழி வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கடவுள் கொள்கையாகும். உலக உயிர்களை எல்லாம் தன்உயிர்போல் நேசிககும் ஜீவகாருண்ய ஒழுக்கமும்.(பரோபகாரம்).இறைவனை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் இரண்டும் ஆன்மலாபம் பெறுவதற்கு முக்கியமான அகம்.புறம் வழிபாட்டு முறைகளாகும். காலம் உள்ளபோதே பெறவேண்டியதை பெற்றுக்கொள்வதே.அறிவு பெற்ற மனிதர்களுக்கு கிடைத்தை ஆன்மீக உண்மை வழிபாடாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

உணவே அருளுக்குத் தடை !

vallalar

இந்த பஞ்ச பூத உலகில் இறைவனால் அனுப்பிய ஆன்மாக்கள் வாழ்வதற்கு உயிர் தேவை உடம்பு தேவை. ஆன்மாவானது உயிர் உடம்பு எடுத்துவிட்டால் அடுத்து அடுத்து பிறவி எடுக்கும் வரை அந்த அந்த உயிர்களின் தகுதிக்குத் தகுந்தவாறு உணவு அவசியம் தேவை. தாவரம் முதல் மனித தேகம் வரை உணவு உட்கொண்டு தான் வாழ்ந்தாக வேண்டும்.அதுவே இந்த மாயை உலகத்தின் பிறப்பு இறப்பின் சட்டம். உணவு உட்கொள்ளுகின்ற வரை பிறப்பு இறப்பு உருமாற்றம் உடல் மாற்றம் நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஆன்மாவானது உயிர் உடம்பு எடுத்துக் கொண்டே இருக்கும்.பசி என்பது ஒரு உபகாரக்கருவியாகும்.அந்த கருவியை அகற்ற வேண்டும் நீக்க வேண்டும். உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகத்தில் மட்டுமே பசியை நீக்க வேண்டும் நீக்க முடியும்..பசியை நீக்கினால் தான் இறைவன் அருளை வழங்குவார். மனித தேகத்தில் மட்டுமே அருள் பெறமுடியும். ஆன்மாவானது உயிர் உடம்பு இரண்டையும் அருள் ஒளியாக மாற்றம் அடைய செய்விக்க வேண்டும். பசியையும் உணவையும் நீக்க வேண்டுமானால் அருள் பெற்றாக வேண்டும்.அருள் பெற வேண்டுமானால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

உணவு உட்கொள்ளுகின்றவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாது. உணவுதான் மரணத்திற்கு காரணம் ! உணவினால் தான் மரணம் வருகின்றது. பிறப்பு இறப்பு நிகழ்ந்து கொண்ட உள்ளது என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து.அறிவால் அறிந்து இறைவன் மேல் இடைவிடாது அன்பு செலுத்துகின்றார் வள்ளலார் உண்மையாக இறைவன்மேல் அன்பு செலுத்தினால் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்பார் வள்ளலார். பசியை அறுசுவை உணவை நிறுத்தி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று மரணத்தை வென்று பிறப்பு இறப்பு இல்லாமல் ஒளிதேகத்தோடு வாழ்ந்து கொண்டுள்ளவர் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

உற்ற தா ரணியில் எனக்கு உலக உணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருணவு உண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.!

வள்ளல்பெருமான் அவர்கள் பெற்ற தாய் வருத்தம் அடையாமல் இருக்க வயிறு நிறைய உணவும்.நெருங்கிய நண்பர் மனம் வாட்டம் அடையாமல் இருக்க ஒரு கவலம் உணவும் உட்கொண்டு இருக்கிறேன் மற்று இவை அல்லால் உணவை நினைத்தாலே மனம் நடுங்கியது என்கிறார்.

மேலும் வள்ளலார் பாடல் !

ஈரமும் அன்பும் கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. !

மேலே கண்ட பாடலில்.. ஊரமுது என்னும் உணவை உண்டு அழியாதீர்கள்.ஒழியாதீர்கள் என்னைப்போல் ஆரமுதம் உட்கொண்டு. என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழலாம் வாருங்கள் அருட்பெருஞ்ஜோதி கண்டு அருளைப்பெறலாம் என்று ஆனந்த களிப்போடு தெளிவாக சொல்லி அழைக்கின்றார்.

உணவே எமன் ! வள்ளலார் பாடல்!

சோற்றாசை யொடு காமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொல்லக்
கூற்றாசைப் படும் எனநான் கூறுகின்ற
துண்மை யினில் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக் கின்றருள்வார்
போலும் அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் கருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பேசு வீரே.!

சோற்றாசையும் அதனால் உண்டாகும் காமம் என்னும் சேற்றாசைப் படுவோரை எமன் என்னும் கூற்றுவன் சர்வசாதாரணமாக வந்து அழைத்து கொண்டு போய்விடுவான்.எனவே ஞானசபாபதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று.முத்தேக சித்தி என்னும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அழைக்கின்றார்..

வள்ளலார் பாடல் !

சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல் தவம் எலாஞ் சுருங்கி
ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் றறிஞர்கள் உரைத்திடல் சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசா ரஞ்சேர்
சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை தங்கினேன் என்செய்வேன் எந்தாய்.!

சோற்றிலே விருப்பம் உள்ளவன் எவ்வளவு காலம் தவம் செய்தாலும் பயன் இல்லை அருள் பெறவதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார். எப்படிஎனில் ஆற்றிலே கரைத்த புளி பயன் இல்லாமல் கரைந்து கண்களுக்குத் தெரியாமல் போய்விடுவது போல் .காரம் சாரம் சேர்த்து ஆகாரம் உட்கொண்டு தவம் செய்வது பயன் அற்றுப் போய்விடும் என்பதை அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.. எனவே சாதாரண மனிதர்களின் பசியைப் போக்கி தன் பசியை நீக்கி வாழ்வதே அருள் பெரும் சிறந்த சுத்த சன்மார்க்க பயிற்சியாகும்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.!

பிறப்பு இறப்பு என்னும் மாயை சட்டத்தை கிழித்தவர் வள்ளலார். அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது உணவே என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும். இன்னும் விரிக்கில் பெருகும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!

*சத்திய தருமச்சாலை !*

vallalar

154 ஆம் ஆண்டு இன்று தருமச்சாலை தோற்றுவித்த திருநாளாகும். உலகில் முதன் முதலில் பசித்த ஏழைகளுக்கு ஆதரவு அற்ற ஜீவர்களுக்கு, பசியை போக்க வடலூரில் வள்ளலாரால் தோற்றுவிக்கப்பட்டது தான் சத்திய தருமச்சாலை.

*சத்தியதருமச்சாலை*

உலகில் மானிடப்பிறவி எடுத்த அனைவருக்கும் , உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இருப்பிடம் இவை மூன்றும் அவசியமானதாகும் , வள்ளலார் காலத்தில்.சாதி.சமயம்.மதம் போன்ற கொடுமையான வெரிபிடித்த காலம். நம் நாடு ஆங்கிலேயர் பிடியில் இருந்தது.அப்போது நம் நாட்டில் வாழ்ந்த மக்களை மாட்டு மந்தைகள்போல நடத்தி வந்தார்கள்.எந்த விதமான உரிமையும் கொடுக்காமல் , அடக்கு முறை ஆட்சி செய்து வந்தார்கள் என்பது அனைவரும்அறிந்ததேயாகும்.

சாதி.சமயம்.மதம் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வந்த ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ,நாட்டுமக்கள் வறுமையும் ,துன்பமும் ,துயரமும் , அச்சமும் ,அவலமும் பயமும் அடைந்து வாழ்ந்து வந்தார்கள். இதை கண்ட வள்ளலார் அவர்கள், வறுமையில் வாடும்மக்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்துள்ளார் . அவர் பட்ட வேதனைகளை பல பாடல்களில் பதிவு செய்துள்ளார் .

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும இரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்து கின்றோர் என்
நேருறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் .

அடுத்தபாடல் ;–

உடுக்கவோ ஒரு கந்தைக்கு மேலில்லை
உண்ணவோ உணவுக்கும் வழி இல்லை
படுக்கவோ பழம் பாய்க்கும் கதி இல்லை
பாரில் நல்லவர் பாற்சென்று பிச்சை நான்
எடுக்கவோ திடமில்லை என்பால் உனக்கு
இரக்கம் என்பதுமில்லை என்செய்குவேன் !

மேலும்.

சோறில்லை மேல் வெள்ளைச சொக்காய் இல்லை
நல்ல சோமனில்லை
பாடில்லை கையில் பணமும் இல்லை
தேகப் பருமனில்லை
வீடில்லை யாதொரு வீராப்பும் இல்லை.!

எனறு மக்கள் படும் துயரத்தை தான் படுவதுபோல் வெளிப்படுத்துகிறார் வள்ளலார் .இவைபோல் பலபாடல்கள் பதிவுசெய்துள்ளார் . அடுத்து; மக்களின் துன்பம்.துயரம்.அச்சம் பயம்.பசியைப் போக்காமல் தான்தோன்றித் தனமாக ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும். ஆங்கிலேயர்கள் மற்றும் அனைத்து ஆட்சியையும் கண்டித்து பலபாடல்கள் எழுதிவைத்துள்ளார் வள்ளலார்;—

கருணை இலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க –தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து !
நடு நிலையில்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடார் தமையரை நாளுங்
கெடுநிலை நினைக்குஞ் சிற்றதிகாரக்
கேடரைப் பொய்யலார் கிளத்தாய்
படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை யுலக நடைஎலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் நெந்தாய்!

எனறு ஆட்சியில் இருப்பவர்களை கடுமையாக சாடுகிறார் வள்ளலார், மக்களை கவனித்து ,மக்களுக்கு நண்மை செய்யவேண்டிய அரசு ,கொடுமைகளை செய்கிறது , கொடுமைகள் செய்யும் அரசு அழிந்தால்
தவறில்லை எனறு தனது வேதனையை வெளிப்படுத்துகிறார்.

*கருணையே வடிவானவர் வள்ளலார்*.

அவர் எண்ணத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகள் தோன்றி சொல்லி இருக்கிறார் என்றால் ,ஆங்கிலேயர் ஆட்சியின் அடக்கு முறை எந்த அளவிற்க்கு இருந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும் . வள்ளலார் மற்ற ஆன்மீக வாதிகள் போல் இல்லாமல் தனித்தன்மை வாய்ந்தவராக இருந்தார் . மக்கள் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் அக்கறைக் கொண்டு கவனித்து வந்துள்ளார் என்பது ,தெள்ள தெளிவாக தெரிகிறது . வாயால் சொன்னால் போதாது ,எழுத்தால் எழுதி வைத்தால் போதாது ,செயலால் செய்து காட்ட வேண்டும் எனறு எண்ணி செயல்படுத்தி காட்டுகின்றார் வள்ளலார் ,

*சத்திய தருமச்சாலை*

பசி ,பட்டினி ,வறுமை, துன்பம் ,எனறு போராடிக் கொண்டிருக்கும் ,மக்களுக்காக முதலில் மக்களின் பசிப்பிணியை போக்கவேண்டும் எனறு எண்ணிய வள்ளலார் அவர்கள் உலகத்தின் மத்தியப் பகுதியான் தமிழ் நாட்டில் வறுமை அதிகம் உள்ள உத்திர ஞான சிதம்பரம் எனறு அழைக்கப்படும் *வடலூரில்* முதன் முதலில் பசியின் கொடுமையைப் போக்க ,பசித்தோருக்கு உணவு அளிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் . வள்ளலார் திருக்கரங்களால் ஏற்றிய அடுப்பு 23 –5–1867 ,ஆம்ஆண்டு வைகாசி 11 ,ஆம் நாள் வடலூர் பெருவெளியில் சத்திய தருமசாலையை, வள்ளலார் அவர்கள். அவர் கையாலே அடுப்பு மூட்டி ஆரம்பித்து வைக்கிறார் ,அவர் முட்டிய அடுப்பு , இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டும் ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டும் வருகிறது.

அணையா அடுப்பு

அங்கு வரும் அனைவருக்கும் சாதி.சமய.மதம்.மொழி இனம் என்ற ,எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் தினசரி சமரச சாப்பாடு அளித்துவருகிறார்கள் . அவர் கையால் எரியவிட்ட அடுப்பு, அது தொடர்ந்து இன்றுவரை, தங்குதடை ஏதும் இன்றி, வட லூர்
பெருவெளியில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை* விளங்கிவருகின்றது. உலகிலுள்ள ஆன்மீக வாதிகள் ,யோகிகள் , தவசிகள் , ஞானிகள் ,மேலோர்கள் எல்லாம் ,கடவுளைக் காண வேண்டும் எனறும் ,கடவுளின் அருளைப் பெறவேண்டும் எனறும் ,யாகம், தவம்,யோகம் ,தியானம் செய்ய வேண்டி காடுகளிலும் ,மலைகளிலும் ,குகைகளிலும், ஆலயங்களிலும்,அலைந்து திரிந்தார்களே தவிர மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

அவர்கள் மக்கள் பசியின் கொடுமையை அகற்ற வேண்டும் என்றோ ,மக்களின் அவல நிலையை போக்க வேண்டும் என்றோ எண்ணியதாக தெரியவில்லை . அந்த பெரியோர்கள் எல்லாம் முக்திநிலையை அடையவே முயற்ச்சி செய்தார்களே தவிர வேறு முயற்ச்சிகள் எதுவும் செய்யவில்லை. மற்றும் சிலர் ,கல்லு ,மண் ,மரம் ,வெள்ளி ,தங்கம் , போன்ற சிலை வடிவில் உள்ள பொய்யான உருவங்களை கடவுளாக எண்ணி ,அவைகளுக்கு பெயர் சூட்டி,பக்திப் பாடல்கள் ,பாடி பணிந்தார்க்ளே தவிர. உலகில் உள்ள நடமாடும் உயிரினங்களைப் பற்றி கவலைப் பட்டதாக எதுவும் தெரியவில்லை .

இறைவனால் படைக்கப்பட்ட உலகில் உள்ள மக்கள் மற்றும் உயிரினங்கள்,துன்பப் படுவதைப் பார்த்த ஞானிகள். அது அவரவர்கள் செய்த பாவமும் ,புண்ணியமும் எனறு விளக்கம் தந்தார்கள். பாவமும் புண்ணியமும் கடவுளால் கொடுக்கப்
படுகிறது.அவர்கள் அனுபவித்துதான் ஆக வேண்டும் எனறு சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள் , ஆனால் வள்ளலார் அவர்கள்.முன்னாடி தோன்றிய அருளாளர்கள் சொல்லிய கருத்துக்களை மறுத்து ,உண்மை கருத்துக்களை உலகுக்கு
எடுத்து உரைத்துள்ளார் ,பாவம் ,புண்ணியம் என்பது எல்லாம் ஏமாற்றுவேலை என்கிறார் . பாவமும் ,புண்ணியமும் நாம் செய்யும் செயல்பாட்டில் தான் வருகிறது ,நல்லதை நினைத்து நல்லது செய்தால் நண்மைகள் கிடைக்கும் ,கெட்டதை நினைத்து கெட்டதை செய்தால் ,தீமைகள தான் வந்துசேரும் ,நன்மையையும் ,தீமையும் பிறர்தர வாரா என்பதுபோல். நன்மைக்கும் தீமைக்கும் நாமேகாரணமே ஒழிய பிறரால் வருவதில்லை .

*கடவுளுக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை எனறு வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்* . உலகிலுள்ள உயிர்களை தம்முயிர் போல் எண்ணி அவைகளுக்கு துன்பம் தராமல் ,துன்பம் வந்தால் அத்துன்பங்களை போக்குவதற்கு உண்டான
வழிவகைகளை கண்டுபிடித்து அவைகளைப் போக்குவதுதான் கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் ,

*உலகினில் உயிர்களுக்குறும்* *இடையுறுறேல்லாம்*
*விலக நீ யடைந்து* *விளக்குக மகிழ்க*
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுக எனறு உரைத்த மெய்ச்சிவமே !
உயிரெலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச செப்பிய சிவமே !
பயிர்ப்புறு கரணப்பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே!
பட்டினி யுற்றோர் பசித்தனர் களையால்
பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போதெல்லாம்
உளம் பகீர் என நடுககுற்றேன்
இட்ட இவுலகிற் பசி எனில் லெந்தாய்
என்னுளம் நடுங்குவது இயல்பே!

எனறு உயிர்கள் மேல் அன்பு.தயவு.கருணை கொண்டு பல பாடல்கள் அருட்பாவில் எழுதி வைத்துள்ளார். எழுதி வைத்ததோடல்லாமல் உயிர்கள் படும் துன்பங்களை பார்த்து.தான் படுவது போல் எண்ணி வேதனையும் வருத்தமும் அடைந்து நடுங்கியுள்ளார் ,கடவுள் படைப்பினால் தோன்றிய உயிர் இனங்களை வாழ வைப்பதே பெரும் தவமாகும் என்றார் . தவம், யோகம்,யாகம் தியானம் செய்யும் , சித்தர்கள்,முத்தர்கள் ,மேலோர்கள் அனைவரும் ஜீவகாருண்யம் செய்யாமல் இறை அருளைப் பெற
முடியாது என்றார் .

*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு* !

*உயிர்கள்மேல் கருணைக் காட்டுவதே
கடவுள்வழிபாடு* என்றார்.
உயிர்க்கொலை செய்யாதது தான்
கடவுள்வழிபாடு என்றார்
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையே
கடவுள் வழிபாடு என்றார்

கடவுள் ஒருவரே! அவரே அருட்பெரும்ஜோதி ஒளியாக இருக்கிறார் என்பதை ,அறிவுசார்ந்த தெளிவுடன் உணர்வதே கடவுள் வழிபாடு என்றார். இயற்கை உண்மையை உண்மையுடன் உணர்ந்த வள்ளலார் உயிர்களின் பசிப்பிணியை போக்க வடலூரில்
சத்திய தருமச்சாலையை தோற்றுவித்தார் . வள்ளலார் தருமச்சாலை தோற்றுவித்த பிறகு, ஆலயங்களில் பிரசாதம் கொடுத்த வந்தவர்கள் , அன்னதானம் வழங்க ஆரம்பித்தார்கள் ,

தமிழக அரசின் காங்கிரசு ஆட்சியில் திரு ,காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை சட்டபூர்வமாக கொண்டுவந்தார் , அடுத்து வந்த தமிழக முதல்வர் திரு ,எம், ஜி, ராமச்சந்திரன் அவர்கள் ,சத்துணவு திட்டமாக கொண்டுவந்து , ஏழை எளிய மாணவர்களின் பசியை போக்கிவந்தார்கள். அடுத்து வந்த தமிழக முதல்வர் திரு ,மு ,கலைஞர் , கருணாநிதி அவர்கள் சத்துணவு திட்டத்தை ,மேலும்
,அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும், உணவு வழங்க சட்டத்தின்மூலம் விரிவுப் படுத்தினார்.

அடுத்து வந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.அம்மா உணவகம் என்று அமைத்தும் ஆலயங்களிலும் உணவு வழங்கி பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வந்தார். அதுமட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பசியின் கொடுமையால் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளார்கள் இவையெல்லாம் எதைக்காட்டுகிறது என்றால் வள்ளலார்அவர்களின் எண்ணம்.சொல்.செயல் அவரின் அருள் ஆற்றல். இன்று உலகம் முழுவதும் தமிழ் நாட்டை திரும்பிப் பார்க்கப்படுகிறது.
பசி பட்டினி இல்லா உலகமாக உண்டாக்குவதே வள்ளல் பெருமானின் கருணை உள்ளமாகும்

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !